அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கோரிய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த், மார்ச் 5 ஆம் தேதி தனது ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து, ஒருமணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் ரஜினி பேசியதாவது….

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீங்களும் கமலும் சேர்ந்து நிரப்புவீர்களா?

அதற்கு நேரம் வரும்போதுதான் பதில் தெரியும்.

அரசியலுக்கு வருவதாகச் சொல்லி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன? கூட்டத்தில் என்ன பேசினீர்கள்?

கூட்டத்துக்குள் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்ன பேசினீர்கள்? கூட்டம் எப்படி இருந்தது?

மாவட்டச் செயலாளர்களுடன் அதுகுறித்துத்தான் பேசினேன். கூட்டம் திருப்தியாக இருந்தது. அவர்களிடம் நிறைய கேள்விகள் இருந்தன. அதற்கெல்லாம் நான் பதிலளித்தேன். நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கெல்லாம் நிறைய திருப்தி. ஆனால் எனக்கு ஒரு விஷயத்தில் அவ்வளவு திருப்தி இல்லை. ஏமாற்றம்தான். அது என்னவென்று நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. பிறகு சொல்கிறேன்.

ஏமாற்றம் என்றீர்களே அது என்ன?

எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்தான். நேரம் வரும்போது சொல்கிறேன்.

இவ்வாறு ரஜினி பேட்டி அளித்தார்.

ரஜினிகாந்த் இவ்வாறு சொன்னதும் பல்வேறு யூகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று,

கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர்கள், கட்சி தொடங்கியதும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம், அப்போதுதான் செலவுகளைச் சமாளிக்க முடியும் என்று கூறியதாகத் தெரிகிறது. கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று ரஜினி சொல்லியிருந்தார்,அதற்கு மாறாக கூட்டணி வைக்கலாம் என்றும் அதுவும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று பலர் பேசியதுதான் ரஜினிக்கு ஏமாற்றம் கொடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Leave a Response