தனுஷ் 41 படத்தின் கதை இதுவா? – தொடங்கும்போதே பரபரப்பு

நடிகர் தனுஷ் அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மலையாள நடிகர் லால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தியும் கிடைத்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சனவரி 4 ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்கியுள்ளது.

அங்கு இருபத்தைந்து ஏக்கரில் பெரிய செட் போட்டு அதில் முதல்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படத்துக்குக் கர்ணன் என்று பெயர் வைத்திருப்பதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் 1999 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் குறித்த படம் என்றும் சொல்லப்படுகிறது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எழுபது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் கூலி உயர்வு, பெண்கள் பணியில் இருக்கும் போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மேலும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான த.மா.கா, இடது சாரிக் கட்சிகள், இசுலாமிய அமைப்பினர் தலைமையில் பேரணியாக சூலை 23, 1999 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று மனு கொடுக்கப் பேரணியாக வந்தனர்.

வழி நடத்தி வந்த அரசியல் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க காவற்துறை மறுத்தது. ஆகையால் காவல்துறைக்கும் மக்களுக்கும் மோதல் ஏற்படவே, காவல் துறை திடீரென தடியடி நடத்தியது. காவல்துறையின் தாக்குதலை எதிர்பாராத மக்கள் நிலை குலைந்து சிதறி ஓடினார்கள்.

தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஒருபுறம் சுவர் எழுப்பப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மறுபுறம் தாமிரபரணி ஆறு. தப்பிக்க வழிதேடி பெருவாரியானோர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்துத் தப்பிக்க முயன்றதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பலதரப்பட்ட சாதி மதத்தைச் சேர்ந்த பதினேழு பேர் மரணமடைந்தனர். மேலும் அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர் உட்பட 500 பேருக்கும் மேல் இதில் காயமடைந்தார்கள்.

இந்நிகழ்வு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிகழ்வை அடிப்படையாக வைத்தே இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response