மசூதியில் நடக்கும் இந்து திருமணம் – கேரள ஆச்சரியம்

கேரள மாநிலம் காயங்குளம் நகரில் உள்ள செருவாலியில் முஸ்லிம் ஜமாத்தினரின் பழங்கால மசூதி உள்ளது. இதன் அருகில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பிந்து என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார்.

இந்நிலையில், பிந்துவின் மகள் அஞ்சுவிற்கு அந்த பகுதியில் உள்ள சரத் சசி என்பவருடன் வரும் ஜனவரி 19 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஏழ்மையின் காரணமாக மண்டபம் உள்ளிட்ட செலவுகள் பிந்துவால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அவருக்கு உதவி வரும் முஸ்லிம் குடும்பத்தாரிடம் மகளின் திருமணம் உதவி குறித்து பிந்து கேட்டிருக்கிறார். பிந்து குடும்பத்திற்கு உதவி வரும் அலூமூத்தில் அந்த மசூதி அறக்கட்டளையின் செயலாளராக உள்ள நிலையில் பிந்துவின் கோரிக்கையை தொழுகைக்கு வந்தவர்களிடம் முன்வைத்துள்ளார்.

பிந்துவின் நிலைமை கருதி அனைவரும் மசூதி வளாகத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கினர். இதனையடுத்து வரும் ஜனவரி 19 ஆம் தேதி அந்த மசூதியின் வளாகத்தில் கூடாரம் அமைத்து இந்து மணமக்களின் திருமணம் நடைபெற உள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் மத நல்லிணக்கம் சூழல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை அவை தடுத்து நிறுத்தும் என நம்புகிறோம் என அம்மசூதி ஜமாத்தின் செயலாளரான அலூமூத் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு மத நல்லிணக்‍கத்துக்‍கு சிறந்த எடுத்துக்‍காட்டு என அப்பகுதி மக்‍கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Leave a Response