ஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி

இந்தியா – மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்றிரவு நடந்தது.

‘டாஸ்’ வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணித்தலைவர் பொல்லார்ட், முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி லோகேஷ் ராகுலும், ரோகித் சர்மாவும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் புகுந்தனர்.

இருவரும் திருப்திகரமான தொடக்கம் அமைக்கத் தவறினர். ராகுல் (11 ரன்), கேரி பியர் பந்து வீச்சை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே முன்கூட்டியே இறக்கப்பட்டார். கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அதிரடி காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுமுனையில் ரோகித் சர்மா (15 ரன், 18 பந்து, 2 பவுண்டரி), ஹோல்டரின் பந்து வீச்சில் ஆப்-ஸ்டம்பு பக்கமாக நகர்ந்து பந்தை பின்பகுதியில் தூக்கிவிட முயற்சித்து கிளின் போல்டு ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு அணித்தலைவர் விராட் கோலி வந்தார். பொல்லார்ட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிய ஷிவம் துபே, தனது முதலாவது அரைசதத்தையும் எட்டினார். முதல் 10 ஓவர்களில் இந்தியா 93 ரன்கள் திரட்டியது. இதனால் இந்திய அணி 190 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷிவம் துபே வெளியேறியதும் உத்வேகம் தளர்ந்து போனது. துபே (54 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் ஹேடன் வால்ஷின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். கோலி 19 ரன்னில் (17 பந்து, 2 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்கள் புதிய யுக்தியைக் கடைபிடித்து இந்திய அணியின் ரன்வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தினர்.

கடைசி கட்டத்தில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (33 ரன், 22 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) மட்டும் கணிசமான பங்களிப்பை அளித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. கடைசி 6 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் வெறும் 42 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆனால் எக்ஸ்டிரா வகையில் 13 வைடு உள்பட 18 ரன்கள் கிடைத்தது.

அடுத்து 171 ரன்கள் இலக்கை நோக்கி மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லென்டில் சிமோன்சும், இவின் லீவிசும் இறங்கினர். ஆரம்பத்தில் இருவரும் சற்று தடுமாறினர். முதல் 5 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தனர். தலா ஒரு முறை கண்டம் தப்பிய நிலையில் வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் லீவிஸ் 2 சிக்சர் ஓடவிட்டார். அதைத் தொடர்ந்து துரிதமான ரன் சேகரிப்பில் தீவிரம் காட்டினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் ஏற்படுத்தி கொடுத்தனர். இவின் லீவிஸ் 40 ரன்களில் (3 பவுண்டரி, 3 சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த ஹெட்மயர் தனது பங்குக்கு 3 சிக்சருடன் 23 ரன்கள் விளாசினார். அவரது கேட்ச்சை எல்லைக்கோடு அருகே கோலி அருமையாகப் பிடித்து மெய்சிலிர்க்க வைத்தார்.

அடுத்து சிமோன்சுடன், விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் கைகோர்த்தார். இந்திய பந்து வீச்சைச் சிதறடித்த இந்த ஜோடி தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிமோன்ஸ் 67 ரன்களுடனும் (45 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), பூரன் 38 ரன்களுடனும் (18 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணி 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து 7 தோல்விகளுக்குப் பிறகு அந்த அணி பெற்ற முதல் வெற்றி இது தான்.

தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பையில் வருகிற 11 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

Leave a Response