தண்ணீரைப் பாதுகாக்க விடுமுறை நாளிலும் வீதிக்கு வந்த விவசாயிகள்

ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கம் சார்பில்,

காய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை

என்ற முழக்கத்தோடு (PAP) பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் ஆனைமலையாறு நல்லாறு அணைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வலியுறுத்தி கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பெயர்ப் பலகை திறக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இன்று (03/11/19) ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் மந்திரிபாளையம் கிராமத்தில் காலை 10 மணிக்கு மூன்றாம் கட்ட பெயர்ப் பலகை திறக்கும் நிகழ்ச்சி விவசாயிகள் கிராம மக்கள் இளைஞர்கள் பங்கேற்க சிறப்புடன் துவங்கியது.

அதைத்தொடர்ந்து,குள்ளம்பாளையம் பிரிவு,
வாவிபாளையம்,முத்தூர்,கொசவம்பாளையம்,பழனிகவுண்டன்பாளையம்,காளியப்பகவுண்டன்புதூர், கழுவேறிபாளையம்,கோட்டப்பாளையம்,குள்ளம்பாளையம் ஆகிய கிராமங்களில் வாகனப் பேரணியாகச் சென்ற நூற்றுக்கணக்கானோரை உள்ளூர் மக்கள் வரவேற்க மிகச் சிறப்பாக ஆனைமலையாறு நல்லாறு விழிப்புணர்வு பெயர்ப் பலகை கிராமப் பெரியவர்கள் கரங்களால் திறக்கப்பட்டது.

நிறைவாக,அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் போராட்டத்தின் அவசியம் குறித்து விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பொது கூட்டம் நடைபெற்றது.

மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு விவசாயிகள் பொதுமக்கள் இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று நடத்திய இந்த போராட்டம் PAP பாசன பரப்பு கிராமங்களில் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாசனசபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி,என்.எஸ்.பி.வெற்றி, தங்கவேல், ஈஸ்வரன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் சுந்திரமூர்த்தி,பார்த்தசாரதி ,அத்திக்கடவு போராட்ட குழு வெள்ளியங்கிரி, சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Response