இந்தியாவுக்கு எதிராக முதல்வெற்றி – வங்க தேசம் சாதனை

இந்தியா – வங்காளதேசம் மட்டைப்பந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் நேற்றிரவு நடந்தது.

இதில் ‘டாஸ்’ வென்ற வங்காளதேச அணித்தலைவர் மக்முதுல்லா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களம் புகுந்தனர். ரோகித் சர்மா 9 ரன்னில் நடையைக் கட்டினார். அடுத்து லோகேஷ் ராகுல் வந்தார்.

முதல் 6 ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் 15 ரன்னில் கேட்ச் ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு அடியெடுத்து வைத்த ஸ்ரேயாஸ் அய்யர் 2 சிக்சர்களை அடித்தார். ஆனால் அவரும் நீடிக்கவில்லை. மீண்டும் சிக்சருக்கு முயற்சித்த ஸ்ரேயாஸ் அய்யர் (22 ரன், 13 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆகிப்போனார்.

இதன் பின்னர் ஷிகர் தவானுடன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கைகோர்த்தார். நிதானமாக ஆடிய ஷிகர் தவான் (41 ரன், 42 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட்டில் வெளியேற்றப்பட்டார். புதுமுக வீரர் ஷிவம் துபே (1 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ரிஷாப் பண்டின் (27 ரன், 26 பந்து, 3 பவுண்டரி) பேட்டிங்கிலும் எழுச்சி இல்லை. இதனால் ரன்வேகம் வெகுவாக தளர்ந்தது. வங்காளதேசம் 8 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி இந்தியாவின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் நமது பேட்ஸ்மேன்கள் 30 ரன்களை திரட்டினர். குருணல் பாண்ட்யா 15 ரன்னுடனும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் 14 ரன்னுடனும் (5 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் 149 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி முதல் ஓவரிலேயே லிட்டான் தாசின் (7 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தது. இதன் பின்னர் முகமது நைமும், சவுமியா சர்காரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 54 ரன்களை எட்டிய போது முகமது நைம் 26 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இறங்கினார்.

வங்காளதேச அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அவர்களின் ரன்ரேட் கொஞ்சம் குறைந்தாலும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அது தான் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. விக்கெட் கைவசம் இருந்ததால் அவர்கள் நம்பிக்கையுடன் போராடினர். சவுமியா சர்கார் தனது பங்குக்கு 39 ரன்கள் எடுத்த நிலையில் கிளன் போல்டு ஆனார். இதைத் தொடர்ந்து கேப்டன் மக்முதுல்லா வந்தார்.

கடைசி 3 ஓவர்களில் வங்காளதேசத்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை வீசிய யுஸ்வேந்திர சாஹல் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் முஷ்பிகுர் ரஹிம் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை ஓடவிட்டு இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக்கியதுடன் தனது அரைசதத்தையும் கடந்தார்.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 4 ரன்களே தேவைப்பட்டது. இதில் மக்முதுல்லா விளாசிய சிக்சரோடு ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்காளதேச அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரஹிம் 60 ரன்களுடனும் (43 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), மக்முதுல்லா 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முஷ்பிகுர் ரஹிம் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக வங்காளதேச அணியின் முதலாவது வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வங்காளதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2-வது 20 ஓவர் போட்டி நவம்பர் 7 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

Leave a Response