கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு, நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், சிலரோ கமலுக்கு ஏன் கொடுக்கவில்லை என்ற ரீதியிலும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தன் ட்விட்டர் பதிவில், “நடனக்கலைஞர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், கலைத்துறையில் 60 ஆண்டுகள் பணியாற்றியவர் கமல்ஹாசன். அவரை விட திரைத்துறையில் சாதனை புரிந்தவர்கள் வேறு யார் ?” என்று பதிவிட்டுள்ளார்.
ரஜினிக்கு விருது அறிவித்திருக்கும் நேரத்தில், கமலுக்கு ஏன் இன்னும் கொடுக்கவில்லை என்ற ரீதியில் கேள்வி எழுப்பியுள்ளார் ரவிக்குமார். இவரது பதிவுக்குக் கமல் ரசிகர்கள் ஆதரவையும், ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.