வெங்காயம் விலை – மத்திய அரசின் 2 முக்கிய முடிவுகள்

இந்திய ஒன்றியத்தின் மொத்த வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆகியவைதான் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

இந்தப் பகுதிகளில் பலத்த மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் வெங்காயத்தின் விலை கடந்த வாரம் அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயம் 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வெங்காயத்தின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினர்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 29 ரூபாய்க்கு விற்க அரசு நடவடிக்கைகள் எடுத்தது.

இந்நிலையில் உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வெங்காய வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைக்கவும் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

சில்லறை வியாபாரிகள் 100 குவிண்டால், மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் மட்டுமே வெங்காயம் இருப்பு வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Response