ரஜினி கமல் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் – சீமான் கருத்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அவர் கோவை விமான நிலையத்தில்

செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….

தமிழகத்தை ஆண்ட கட்சிகள், தமிழுக்காக என்ன செய்தார்கள்? என்று கேள்வி எழுப்பினால் பதில் கிடையாது.குரூப்-2 தமிழ் பாடம் நீக்கம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது தமிழகத்தை இதுவரை ஆண்ட கட்சிகள் தான்,இதற்குக் காரணம் என்றார். அது உண்மை தான்.

இதுவரை அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்று கேட்டால், அதற்கு பதில் கிடையாது.

கோவை தடாகம்பகுதியில் 75 அடி ஆழத்துக்கு மட்டுமே மண் எடுப்பதற்கு தமிழகஅரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்துஉள்ளது. ஆனால் தனியார் நிறுவனம் 75 அடிக்கும்கீழ் பூமியைத் தோண்டி மண் எடுத்து வருகிறது. இதற்கு மாநில அரசு உடந்தையாக உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். இந்த உயர் அழுத்த மின் கோபுரம் வழியாக மின்சாரத்தைக் கொண்டு செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக மின் கம்பி மூலம் மின்சாரத்தைக் கொண்டு சென்றால், தமிழக அரசுக்கு ரூ.42 கோடி வருமானம் கிடைக்கும்.இதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் அதற்கும் பதில் கிடையாது.

வெளிநாடுகளில் காய்கறி கழிவுகள் மற்றும் குப்பைகளில் இருந்து மீத்தேன் எடுக்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் ஏன் இப்படிச் செயல்படவில்லை? என்று கேட்கத் தோன்றுகிறது.

ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்கவேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி கூறுகிறார். அதனை நான் வரவேற்கிறேன். அரசியலில் பணபலம்தான் ஜெயிக்கும் என்ற நடிகர் சிரஞ்சீவியின் கருத்து சரி என்று ஒப்புக்கொள்கிறேன்.

பேனர் விழுந்து சென்னை பெண் என்ஜினீயர் இறந்த சம்பவத்துக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். தமிழக அரசு இதற்கு கடுமையான சட்டம் விதிக்க வேண்டும்.

தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் பேனர் கலாசாரத்துக்கு அடிப்படையாக செயல்பட்டுவந்தன. ஆனால் இனிவரும் காலத்தில் அவர்கள் தான் பேனர் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. ஆனால்  அ.தி.மு.க.-தி.மு.க.கோடிகளைக் கொட்டி இடைத்தேர்தலைச் சந்திக்கிறது.

நாங்கள் கொள்கையை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிடுகிறோம்.தற்போது தேர்தல் என்பது பெரும்முதலீடு செய்து அதிகளவில் வருமானத்தைக் குவிக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. இதில் நியாயம், தர்மத்தை எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response