அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் இணைய கல்விக்கழகம் மற்றும் உத்தமம் சார்பில் தமிழ் இணைய மாநாடு (டி.ஐ.சி.) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமை தாங்கினார். உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
இதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது….
உலகில் உள்ள 7 ஆயிரத்து 500 மொழிகளில் 101 மொழிகள் தான் இணையதளத்தில் இருக்கிறது. இன்றைய உலகில் 80 சதவீதம் தகவல் தொடர்புகள் செல்போன் மற்றும் இணையதளம் மூலமாகவே நடைபெறுகின்றன. இதில் 54 சதவீதம் தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. இது மற்ற மொழிகளை அழித்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழ் மொழியில் தகவல் தொடர்பு 0.01 சதவீதம் மட்டுமே இணையதளத்தில் உள்ளது. எனவே இணைய தகவல் தொடர்பில் தமிழ்மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தமிழ்மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.
உலகில் உள்ள 7 செம்மொழிகளில் தமிழ், சீன மொழியைத் தவிர மற்ற 5 மொழிகள் பேசப்படுவது கிடையாது. உலகம் வல்லரசாக மாற 2 கருவிகள் மிக முக்கியமானது. பொருளாதார வளர்ச்சி, ராணுவப்படை ஒரு கருவி என்றாலும், மொழி என்பது ஒரு முக்கியமான கருவியாக உள்ளது. மொழிக்கு வார்த்தைகளை உருவாக்குவது என்பது மிக முக்கியம்.
இன்றைய தலைமுறையினர் புதிய வார்த்தைகளை உருவாக்கி வருகின்றனர். சொற்குவை என்கிற இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் புதிய தமிழ் வார்த்தைகளை உருவாக்கலாம். நம்முடைய படைப்புகளுக்கு தமிழ்ப் பெயர் இல்லை.
ஏற்கனவே நாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி வந்தநிலையில், தற்போது தமிழ் காப்புப் போராட்டம் நடத்த இளைஞர்கள் சொற்படை வீரர்களாக தயாராக வேண்டும். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் புதிய வார்த்தைகளை உருவாக்க மாநாடு நடத்த முடிவு எடுத்துள்ளோம்.
தமிழ் வளர்ச்சிக்காக, தமிழை வாழ வைக்க, புதிய தமிழ் சொற்களைப் படைக்க மீண்டும் ஒரு மொழிப்போர் செய்ய வேண்டும். இது மற்ற மொழிகளை எதிர்த்து அல்ல.
எல்லா தீர்ப்புகளும் தமிழ் மொழியில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.