தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில், ஒன்றிய அரசின் ரூபாய் குறியீட்டை மாற்றி, ‘ரூ’ என்ற தமிழ் எழுத்துடன் கூடிய இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற வாசகத்துடன் ‘சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட’ எனக் குறிப்பிட்டு, ரூபாய் குறியீடுக்கு பதிலாக ‘ரூ’ என்ற இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலை தளத்தில் வெளியிட்டார்.
இந்திய ரூபாய்க்கென தனிக்குறியீடு 2010 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதை வடிவமைத்தவர் தமிழரான உதயகுமார் ஆவார். இவர், ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் சமஉ தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.
அவர் வடிவமைத்த ரூபாய் குறியீடு, இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இதுவரை நிதிநிலை அறிக்கையில் அந்த குறியீடே பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டுகூட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு அந்த இலச்சினை ‘ரூ’ என மாற்றப்பட்டிருக்கிறது.
கல்வி நிதி தர மறுப்பது, மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு மீனவர் படுகொலை உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.
இந்தச் சூழலில், ரூபாய் குறியீடு பட்ஜெட் இலச்சினையில் மாற்றப்பட்டிருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.ஒன்றிய ரூபாய் குறியீட்டை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல்முறை.
தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த முடிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது.
திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் இது குறித்துக் கூறியிருப்பதாவது…..
ரூபாய்க்கு பயன்படுத்தப்பட்ட தேவ நாகரி எழுத்தைத் தவிர்த்து ரூ என்ற தமிழ்ச்சொல்லை முதல்வர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதே நாளில் 1975 மார்ச் 13ஆம் நாள் முதல்வராக இருந்த கலைஞர் வெளியிட்ட ஒரு அறிவிப்பை அன்றைய ஒன்றிய அரசு மறுத்திருக்கிறது தேசியக்கொடிக்கு பதிலாக தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என்று முதல்வர் கலைஞர் திட்டமிட்டார். மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடிக்குப் பதிலாக மாநில அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது அன்றைய காங்கிரசு ஆட்சி, இதை ஏற்க முடியாது, மாநிலங்கள் தனிக்கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் வழியாக எதிர்ப்பைத் தெரிவித்தது. இதே நாளில் தான் மாநில உரிமைக்காக திராவிட இயக்கம் தொடர்ந்து குரல் கொடுக்கிறது இப்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாநில உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்து இந்தியாவையே கவனிக்க வைக்கிறார். திராவிட இயக்கத்தின் இந்த உரிமைப் போராட்டம் வழி வழியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுபோல் பல்வேறு தமிழ்ஆர்வலர்களும், பொதுமக்களும் இதை வரவேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.