அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை – சுந்தரவள்ளிக்கு நாம் தமிழர் எச்சரிக்கை

அரசியல் ரீதியாகப் பொதுவெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் மீது தரம்தாழ்ந்த தாக்குதல்களை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் முன்வைத்து வருகின்றனர் என்று பேராசிரியர் சுந்தரவள்ளி புகார் தெரிவித்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் இணையதள பாசறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…..

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் துணைச்செயலாளர் சுந்தரவள்ளி அவர்கள் பொதுவெளியில் தன் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் பெயரை இணைத்திருப்பது மிகுந்த உள்நோக்கம் கொண்டது. நாம் தமிழர் கட்சி மீது கொண்டுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்குப் பழிதீர்க்கும் பொருட்டு வன்மத்தோடு இதனைச் செய்யத் துணிவது கடும் கண்டனத்திற்குரியது.

‘அரசியல் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும்’ எனும் சிலப்பதிகாரம் குறிப்பிடும் நெறிக்கிணங்க, ஒரு கண்ணியமான, கருத்தியல் ரீதியான அறம்சார்ந்த அரசியலை இந்நிலத்தில் உருவாக்கிடவே நாம் தமிழர் கட்சி நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறது.

ஒருவரது கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, அவர் மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுப்பதோ, வசைபாடுவதோ, கண்ணியமற்ற சொற்களைக் கொண்டு உரையாடுவதோ ஒருநாளும் கூடாது என எங்கள் அண்ணன் சீமான் எங்களுக்கு அறிவுறுத்தி, அதன்படியே எங்களை வளர்த்திருக்கிறார்.

அதனைத் தவறாது கடைபிடித்து வருகிறவர்கள் நாம் தமிழர் கட்சியினர். விதிவிலக்காக, ஒருவேளை எங்காவது ஒருவர் நெறிதவறி ஆர்வ மிகுதியில் எதையாவது எழுதிவிட்டால் அவர் மீது கட்சியின் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்திருக்கிறார்.

அரசியல் களத்தில் பெண்ணிய சமத்துவத்தைப் பேசுவதோடு மட்டுமில்லாது தேர்தல் களத்திலும் அதனைச் செயல்படுத்தி இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிகப்படியாக வாய்ப்பளித்த கட்சியாக திகழ்வது நாம் தமிழர் கட்சிதான்.

நிறைவுற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆண்களுக்கு இணையாக 20 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பளித்தோம். அதேபோல, வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் 117 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க இருக்கிறோம்.

இவ்வாறு பெண்களுக்கான பிரதிநிதித்துத்தை முழுமையாக அளித்து அவர்களை அரசியல்படுத்தி அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கான பெரும் பணியினை நாம் தமிழர் கட்சி செவ்வனே செய்து கொண்டிருக்கையில், எங்கள் மீதான நன்மதிப்பை குறைக்கும் நோக்கில் பெண்களுக்கெதிராக அவதூறு பரப்புவதாகப் பொத்தாம் பொதுவாகக் குற்றஞ்சாட்டுவது அபத்தமானது.

சுந்தரவள்ளி மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் துடைத்து எறியப்பட வேண்டியவை. அவை ஒருநாளும் ஏற்க முடியாத அருவெருக்கத்தக்க அணுகுமுறையாகும். நாங்கள் அதனை முற்றாக எதிர்க்கிறோம்.

சுந்தரவள்ளி கருத்துரிமைக்குத் துணை நிற்போம்‌ என்கிறோம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், உண்மைக்குப் புறம்பாக நாம் தமிழர் கட்சியினர் மீது பழி சுமத்துவதை ஒருநாளும் ஏற்க முடியாது. இதேபோன்று தொடர்ச்சியாக எங்களது கட்சி குறித்து சுந்தரவள்ளி அவதூறு பரப்ப முயல்வாரேயானால் அவர் மீது நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மான நட்ட வழக்குத் தொடுக்கும் என எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response