தமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு – ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர்19 அன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

மதுரை ரெயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரெயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் வட மாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கூடத் தேர்வாகவில்லை என்பது கடும் கண்டத்திற்குரியது.

மத்தியில் பா.ஜ.க. அரசும், இங்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் அமைந்த பிறகு, தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டதோடு மட்டுமின்றி, ஏற்படுகின்ற பணியிடங்களிலும் வட மாநிலத்தவர் திணிக்கப்படுகிறார்கள் என்பது இரட்டை வேதனையளிக்கிறது.

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் இல்லை. பிறகு ஐ.சி.எப். ரெயில்வே தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 1765 பேரில் 1600 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் வடமாநிலத்தவர்களை அதிக அளவில் நியமனம் செய்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அடியோடு புறக்கணிக்கும் விபரீத விளையாட்டை மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வருகிறது.

பிற மாநிலங்களில் இருந்து துணை வேந்தர்களை இறக்குமதி செய்ததில் தொடங்கி இப்போது வடமாநில இளைஞர்கள் மூலமே தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலக பணியிடங்களையும் நிரப்பிவிட வேண்டும் என்று கொடிய வஞ்சக எண்ணத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவது கவலையளிக்கிறது.

இங்குள்ள அ.தி.மு.க. அரசோ, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வடமாநில இளைஞர்களை என்ஜினீயர்களாக தேர்வு செய்கிறது.

ஏன், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் நடைபெறும் தேர்வுகளை வட மாநிலத்தவர் எழுதலாம் என்று கூறி இப்போது 176 சிவில் நீதிபதிகள் பதவிக்கு நடைபெறப்போகும் தேர்விலும் வடமாநில இளைஞர்கள் தேர்வு எழுதலாம் என்று சூசகமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

9-9-2019 அன்று தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள விளம்பர எண் 555/2019-ல் ‘தமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

கீழமை நீதிமன்றங்களுக்கும் அகில இந்திய அளவில் தேர்வு என்று மத்திய அரசு நினைக்கும் போதே, மாநில அரசு சிவில் நீதிபதிகள் தேர்வுகளை வடமாநிலத்தவரும் எழுதும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் இளைஞர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, இலவு காத்த கிளிகளைப் போல் காத்திருக்கும் இந்த நெருக்கடியான சூழலில், மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் போட்டிப் போட்டுக்கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை எல்லாம் வடமாநிலத்தவருக்கு வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது.

“மதுரை ரெயில்வே கோட்டத் தேர்வுகளில் ஏன் தமிழக இளைஞர்கள் அதிகம் தேர்வாகவில்லை?” என்ற கேள்விக்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ள காரணங்கள் முற்றிலும் பொருத்தமற்றவை. ஆகவே, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் இனிமேல், தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் வகையில் போட்டித் தேர்வின் விதிமுறைகளை மத்திய அரசு உடனடியாகத் திருத்த வேண்டும் என்றும்; தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற வகையில் தேர்வு விதிகளை உருவாக்கிட வேண்டும் என்றும், சிவில் நீதிபதிகள் தேர்வில் முழுக்க முழுக்க தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

வேலையில்லாத் திண்டாட்டம் தமிழகத்தில் பெருகிக் கொண்டிருக்கின்ற நிலையில், மத்திய-மாநில அரசுகள் உரியத் திருத்தங்களைக் கொண்டுவந்து தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வராவிட்டால், இளைஞர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response