28 ஆண்டுகாலம் சிறைலில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள்பரோலில் வந்து,
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சிங்கராயர் வீட்டில் தங்கியிருந்தார். இவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் இயங்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
51 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று சிறை சென்ற நளீனியை வழியனுப்பி வைத்து விட்டு சிங்கராயர் எழுதியுள்ள பதிவு…..
அரசியலில் ஒரு விசயம் கிடைத்து விட்டால் அதை எப்படி தங்களுக்குச் சாதகமாக அரசியலுக்கு ஆக்கிக்கொள்வது என்கிற சூழலில் உலகமே உற்றுப் பார்த்த ஒரு பிரச்சினையில்
அரசியல் மட்டுமல்ல இயக்கங்கள் மட்டுமல்ல உளவுத்துறை முதற்கொண்டு கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு கண்காணித்த வேளையில், மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோலில் வந்த திரு.நளினி அவர்களுக்கு உங்களின் சார்பாக
பல சிரமங்களுக்கு இடையில் என் குடும்பம் நல்லபடியாக ஒரு குழந்தையைப் பார்ப்பதுபோலப் பார்த்துப் பாதுகாத்து மனவேதனையோடு போன மனுசியை மன வேதனை யோடு அனுப்பி வைத்துவிட்டு அதே மன வேதனையில் உங்களிடம் பகிர்கிறேன்.
நிறைய எழுதலாம். அதுவும் சுய புராணம் பாடுவது போலவே ஆகும்.
ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும்.
இந்த வழக்கை விசாரித்த CBI அதிகாரி திரு.ரகோத்தமன் அவர்களே She is Innocent என்று சொல்லிய அந்தச் சொல்லால் இனி எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்றாலும்
இந்த வழக்கின் எதிர்ப்பாளர்களுக்கு மீண்டும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.
நளினி குற்றமறறவள்.
உங்களின் பார்வையில் அவர் குற்றவாளி என்றாலும்கூட
இந்திராகாந்தி உள்ளிட்ட மற்ற மற்ற வழக்குகளுக்கெல்லாம் ஒரு நீதி.இந்த எழுவருக்கு மட்டும் ஒரு நீதியா என்பதைப் பணிவோடு உங்களின் மனச்சாட்சிக்கு விட்டுவிடுகிறேன்.
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. கோர்ட் சொல்லிடுச்சு. குற்றவாளி குற்றவாளிதான் என்று நீங்கள் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருப்பது நவீன உலகில் அது மனிதத் தன்மை கிடையாது.
முடிந்தால் புரிந்து கொள்ள முயலுங்கள். எனது தாழ்மையான வேண்டுகோள் அவ்வளவே.
அதேசமயம்,நானும் இதை அரசியலாக்காமல் அப்படிப்பட்ட எண்ணத்தைத் துவக்கத்திலேயே அறவே அறுத்தெறிந்துவிட்டு எடுத்த காரியத்தை மிகச் சரியாக செய்து முடித்த திருப்தியில்
52 நாட்களுக்குப் பின்னர் நான் சார்ந்த இயக்கத்தின் வேலைகளைப் பார்க்கத் தயாராகிவிட்டேன்.
பேராசிரியர் சுபவீ அவர்களின் மாணவர்கள் என்றாலே சமுதாயத்தில் நல்ல பெயர் உண்டு. அதை மீண்டும் நிரூபிக்க எனக்கொரு வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சியே.
இதை உங்களின் சார்பாக இதை நான் எடுத்துச் செய்திருக்கிறேன் அவ்வளவே.
திரு. நளினி அவர்களின் பாரத்தை மனக்குமுறல்களை நம்மேல் இறக்கி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
எழுவரின் விடுதலைக்கு அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து அரசுக்கு ஒரு நெருக்குதலைக் கொடுத்தால் மட்டுமே
விடிவு காலம் பிறக்க வாய்ப்பிருக்கிறது.
அவரவர் அவரவர் பாணியில் முயலுங்கள்.
போய் வா மகளே
நெஞ்சில் ஈரமிருப்போரைத் தமிழகம் தக்கவைத்துக்கொண்டுதான் இருக்கிறது.
இரண்டு வயதுக் குழந்தையாகப் பார்த்த உன் குழந்தைக்கு
வயது இப்போது திருமண வயதையும் தாண்டிச் செல்கிறது.
உன் பிள்ளையைக் கட்டியணைக்க மீண்டு வருவாய் என்கிற நம்பிக்கையை இந்த மோசமான அரசியல்வாதிகளெடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் மக்களால் நடக்கும்.
திமுக வெற்றி பெற்றால் முதல் கையெழுத்து உங்கள் எழுவரின் விடுதலையாக மட்டுமே இருக்கும்.
கலங்காதே.
நன்றி.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.