சென்னை திரும்பினார் எடப்பாடி – உடை சர்ச்சை குறித்து விளக்கம்

தமிழகத்துக்கு அதிக அளவில் அந்நிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாடுகளில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி 13 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.

இதையடுத்து அவர் இன்று (செப்.10) அதிகாலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில், அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர்.

இதையடுத்து, முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது….

கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள தனியார் கால்நடைப் பண்ணையில் பின்பற்றப்படும் தொழில்நுட்பங்கள் கேட்டறியப்பட்டன. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா அமைக்கப்படும்.

நியூயார்க் நகரத்தில் தொழிலதிபர்களைச் சந்தித்து ரூ.2780 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் மூலமாக, 17,760 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கவும், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கவும், நியூயார்க் நகரில், ‘யாதும் ஊரே’ திட்டத்தை தொடங்கி வைத்தேன்.

சான்பிரான்சிஸ்கோவில், மின்சாரத்தில் இயங்கும் கார் தொழிற்சாலை நிறுவனமான டெஸ்லாவைப் பார்வையிட்டோம். அத்தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவ அழைப்பு விடுத்தோம். அதனைப் பரிசீலிப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் வந்து அவர்கள் பார்வையிட இருக்கின்றனர்.

வெளிநாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சென்றோம். பல தொழிலதிபர்களைச் சந்திக்கும்போது, அவர்களின் உடையில் இருந்தால் தான் மரியாதை இருக்கும். நம் விருப்பத்தை அங்கு தெரிவிக்காமல், அவர்களின் விருப்பத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்தைப் புகழ்வது போன்று இந்தியாவையும், தமிழகத்தையும் மற்றவர்கள் பாராட்ட வேண்டும். அதனால் தான் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.

சென்ற இடங்களில் எல்லாம் தமிழர்கள் என்னைச் சிறப்பாக வரவேற்றனர். தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நாடுகளுள் ஒன்று இஸ்ரேல். அந்த நாட்டுக்கும் செல்லத் திட்டமிட்டிருக்கிறோம்.

தமிழில் உரையாற்றுவது பெருமையாகத்தான் இருக்கின்றது. ஆனால், எல்லோருக்கும் தமிழ் தெரியாதே. அவர்களின் மொழியிலேயே பேசினால்தான், தமிழகத்தில் வந்து தொழில் தொடங்குவார்கள்

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Response