பாஜக மூத்த தலைவர் மீது மாணவி கூறிய பகிரங்க புகார் – உ.பி யில் பரபரப்பு

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த், உத்தரபிரதேசத்தில் ஆசிரமம் மற்றும் கல்லூரிகளை நடத்தி வருகிறார்.

அவர் நடத்தி வரும் சட்டக் கல்லூரி ஒன்றில் முதுகலைப் பட்டம் படிக்கும் ஒரு மாணவி, கடந்த மாதம் 23 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் ஒரு காணொலி வெளியிட்டார்.

அதில், சாந்த் சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தன்னைத் துன்புறுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார். மறுநாள் அவர் காணாமல் போய்விட்டார்.

பின்னர், அந்த மாணவியின் தந்தை, ஷாஜகான்பூர் காவல்துறையில் சின்மயானந்த் மீது புகார் கொடுத்தார். தன் மகளை அவர் கற்பழித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். கடந்த மாதம் 27 ஆம் தேதி, சின்மயானந்த் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, காணாமல் போன மாணவி, ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.உச்சநீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டார். அவரது குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி,காவல்துறை ஐ.ஜி. நவீன் அரோரா என்பவர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, மாணவியிடம் விசாரணை நடத்தியது. சின்மயானந்தின் வீடு, ஆசிரமம் மற்றும் கல்லூரிக்கும் சென்றது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி, நேற்று முதல் முறையாக பத்திரிகையாளர்கள் முன்பு பகிரங்கமாக பேட்டி அளித்தார். அவரது முகம், கறுப்புத் துணியால் மூடப்பட்டிருந்தது. அவர் கூறியதாவது….

சுவாமி சின்மயானந்த் என்னைக் கற்பழித்தார். ஓராண்டாக என்னை உடல்ரீதியாக பயன்படுத்திக்கொண்டார். அவர் எண்ணற்ற இளம்பெண்களைச் சீரழித்துள்ளார். ஆனால் நான் மட்டுமே துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறேன்.

அவருக்கு எதிரான எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. உரிய நேரத்தில், வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை அளிப்பேன்.

சிறப்புப் புலனாய்வுக் குழு என்னிடம் 8 ஆம் தேதி 11 மணி நேரம் விசாரணை நடத்தியது. கற்பழிப்பு பற்றிச் சொன்னேன். எல்லா விவரங்களையும் சொல்லியும், சின்மயானந்தை இன்னும் கைது செய்யவில்லை.

நான் டெல்லி காவல்துறையில் கொடுத்த புகாரை, அவர்கள் ஷாஜகான்பூர் காவல்துறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சின்மயானந்த் மீது காவல்துறையினர் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யவில்லை.

என் தந்தை காவல்துறையிடம் கற்பழிப்பு புகார் அளித்தபோது, மாவட்ட ஆட்சியர் மிரட்டி உள்ளார். நான் ரூ.5 கோடி கேட்டதாக சின்மயானந்தின் வக்கீல் கூறுவது பொய்க் குற்றச்சாட்டு. அதுபற்றி விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாஜகவின் மூத்த தலைவர் இப்படி நடந்துகொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response