பல்வேறு உணவுப் பழக்கம் கொண்ட நாட்டில் ஒரே குடும்ப அட்டையா? – கமல் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்கின்ற திட்டம் இந்திய அரசியல் சாசனத்தில் கூறியுள்ள கூட்டாட்சி அமைப்பிற்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என கமல் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

2013 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசினால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம், எவ்வித மாற்றமுமின்றி 2016 ஆம் ஆண்டு தற்போதைய அரசால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து, குறிப்பாக அஸ்ஸாம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வேலை வாய்ப்பு மற்றும் இதர காரணங்களுக்காக 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடிபெயர்ந்து தமிழக நகரங்களில் வசிக்கின்றனர்.

தமிழகத்தின் மக்கள் தொகையில் 4 கோடி மக்கள், நகரங்களில் தான் வசிக்கிறார்கள். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நகரவாசிகளுக்கு 50% உச்சவரம்பு என்கின்ற ஆபத்து இருப்பதால், தமிழகத்திற்குக் குடிபெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் விவரங்கள் போன்றவை சரியாக இணைக்கப்படாமல், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்கின்ற திட்டம் கவனக்குறைவாக அமல்படுத்தப்பட்டால் அது தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் பொது விநியோக முறையை கடுமையாகப் பாதிக்கும்.

ஏற்கனவே 2017 இல் அரசு வகுத்த விதிகளின் படி,

1.மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளை கொண்ட தின்காரை மேற்கூரை மற்றும் சுவர்களைக் கொண்ட வீடுகள்.

2. பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்.

3.அனைத்து ஆதாரங்களிலிருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ 1,00,000/க்கு அதிகமாக உள்ள குடும்பங்கள் குடும்ப அட்டை பெறுவதில் இருந்து நீக்கம் செய்வது

போன்ற பொது விநியோக முறையில் மக்களுக்கு இருக்கின்ற தற்போதைய பிரச்சனைகளை தீர்த்து, தமிழக குடும்ப அட்டைதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது.

பிற மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த ஏழைக் குடும்பங்களுக்கு அளிப்பதற்கான தானியங்கள், மற்றும் அதனைச் சேமித்து வைத்து விநியோகிப்பதற்கும் இத்திட்டத்தினால் ஏற்படும் கூடுதல் செலவினை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா என்றும் தெளிவான கொள்கை முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.

இத்திட்டத்தினைக் கடுமையாக எதிர்த்து இருக்க வேண்டிய தமிழக முதலமைச்சரும், உணவுத்துறை அமைச்சரும் இத்திட்டத்தை ஆதரிப்பதையும் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கின்றது.

பல்வேறு உணவுப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில், “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” என்கின்ற இந்தத் திட்டம், இந்திய அரசியல் சாசனத்தில் கூறியுள்ள கூட்டாட்சி அமைப்பிற்கு, ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு திட்டம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி உறுதியாக நம்புகிறது.

எனவே மக்கள் நீதி மய்யம் கட்சி இத்திட்டத்தினை தமிழகத்தில் அமலாக்கம் செய்வதை கடுமையாக எதிர்க்கின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response