சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகல் – குவியும் பாராட்டுகள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2018 ஆகஸ்டு 12 ஆம் தேதி வி.கே.தஹில்ரமானி பதவி ஏற்றார். இவர், அமைதியாகவும், மென்மையான வார்த்தைகளையும் கொண்டும் பேசக்கூடியவர் என்று அனைவராலும் புகழப்பட்டார்.

பொதுவாக தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வுதான் பொதுநல வழக்குகளை விசாரிக்கும். ஆனால், பெண்கள், நீர்நிலைகள் தொடர்பான பொதுநல வழக்குகள் தவிர, பிற வகையான வழக்குகளை தான் விசாரிக்காமல், வேறு டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு ஒதுக்கினார். ஓராண்டாக அவரது பெயர் ஊடகங்களில் அடிபடவில்லை. தன்னைப் போலவே, தன் பணியையும் பரபரப்பு இல்லாமல் அமைதியான சூழ்நிலையுடன் மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில், ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் மூத்த நீதிபதிகள் குழு கூட்டம் கூடியது. அந்தக் கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த, தற்போது இமாசல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் வி.ராமசுப்பிரமணியனை,உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்து தீர்மானம் இயற்றினர்.

அதேகூட்டத்தில், ‘திறமையான நிர்வாகத்துக்காக’ என்று சொல்லி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானியை, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கும், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் மாற்றுவதாக முடிவு செய்து மற்றொரு தீர்மானத்தை இயற்றினர்.

தன்னை மாற்றியதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு, வி.கே.தஹில்ரமானி கோரிக்கை விடுத்தார். அது கடந்த 3 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி, ‘இந்த நீதித்துறையை விட்டு நான் செல்கிறேன். என் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இந்திய ஜனாதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன்’ என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதை கேட்டு அங்கிருந்த அனைத்து நீதிபதிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்படி ஒரு முடிவை எடுக்காதீர்கள்? என்று அவரை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.

ஆனால், அவர்களுக்கு தலைமை நீதிபதி தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். ‘இதுநாள் வரை நேர்மையாகவும், மனசாட்சியுடனும் பணியாற்றியுள்ளேன். தற்போது நடக்கும் இந்த சம்பவங்கள் (மேகாலயாவுக்கு மாற்றம்) என் மனதை கடுமையாக பாதித்து விட்டது’ என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாடும், தமிழக மக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் (தமிழக நீதிபதிகள்) உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு என்னை ஒரு சகோதரியாக நினைத்து அழைக்க வேண்டும். நானும் கண்டிப்பாக உங்கள் வீடு தேடி வருவேன்’ என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

இதற்கிடையில் சென்னை தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு வழக்குரைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்யும் முடிவைத் திரும்பப் பெறவேண்டும் என்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) சென்னை உயர்நீதிமன்றம் முன்பு மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தலைமையில் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் தலையீடு காரணமாகவே தஹில்ரமானி மாற்றம் நடந்திருக்கிறதாம். தன் பதவி விலகல் மூலம் மத்திய அரசுக்கு எதிராக துணிந்து போராடுகிறார் என்று சொல்லி அவரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Response