அரசியல் அழுத்தம் காரணமாக ராஜஸ்தான்காரர் நீதிபதியாக தேர்வு – பெ.மணியரசன் எதிர்ப்பு

உயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வழிகாட்டுவது அரசமைப்புச் சட்டமா? வர்ணாசிரம தர்மமா? என்று
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் திறமையான வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாகத் தேர்வு செய்யும் பணியை “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு” (கொலீஜியம்) செய்து வருகிறது.

அவ்வாறு இப்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள கல்யாண் ஜபக் என்பவரை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு, உயர் நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வு செய்துள்ளது. இவர் இராசஸ்தானைச் சேர்ந்தவர். இவருக்குத் தமிழ் பேசத் தெரியுமே தவிர, தமிழ் படிக்கத் தெரியாது என்கிறார்கள்.

மாநில வாரியாக உள்ள உயர் நீதிமன்றங்களின் பரிந்துரையைப் பெற்று நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் குழு, அந்தந்த மாநில மண்ணின் மக்களுக்கும், அவர்களில் பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழியாக தமிழர்களே நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இராசஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்தது சரியல்ல.வெளியிலிருந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக இத்தேர்வு நடந்திருக்கலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக நீதிபதிகளாக இருக்கிறார்கள். மண்ணின் மக்களுக்கான இட ஒதுக்கீடு எதுவும் இல்லாததால் மண்ணின் மொழி தெரியாத பிற மாநிலத்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் நீதிபதிகளாக இருப்பது சரியல்ல.

எனவே, வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்கும் முடிவை உச்சநீதிமன்றத் தேர்வுக் குழு (கொலீஜியம்) கைவிட வேண்டும்,ஆற்றலுள்ள தமிழர்களை நீதிபதிகளாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பெ.மணியரசன் கூறியுள்ளார்.

Leave a Response