காஷ்மீர் கொடுமைகளுக்கு சாட்சியானது மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரிலுள்ள தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியராகப் பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். இவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை கவர்ந்தார். தற்போது மீண்டும் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “ஜம்மு-காஷ்மீரில் 20 நாட்களுக்கும் மேலாக இலட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பெருவாரியான மக்கள் கவலை கொள்ளவில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவை வரவேற்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் அங்கு வாழும் மக்களுக்கு உரிமை உண்டு” என்றார்.

மேலும், “மக்களின் குரலாக இருப்பதற்காகத் தான் நாம் பதவிக்கு வருகிறோம். ஆனால் இங்கு எங்கள் குரலே எங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. நான் பதவி விலகுவதால் காஷ்மீர் மக்களின் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏதோ ஒரு வகையில் இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் விரும்பவில்லை. எனது மனசாட்சிக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்” என்று கூறினார்.

தனது பதவி விலகல் கடிதத்தை மேலிடத்திற்கு அனுப்பியிருப்பதாகவும், அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் நிலவரம் குறித்து முற்றிலும் பொய்யான தகவல்களையே மத்திய அரசு வெளியீட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கும் வகையில் கண்ணன் கோபிநாதனின் அறிவிப்பு இருக்கிறது.

Leave a Response