காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புரிமை வழங்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகளை மத்திய அரசு ஆகஸ்ட் 5 ஆம் தேதி திடீரென்று இரத்து செய்தது.
அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் எனவும், லடாக் எனவும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.
ஆனால் காஷ்மீருக்கு இருந்து வந்த சிறப்புரிமையை இரத்து செய்ததற்கும், அந்த மாநிலத்தை பிரித்ததற்கும் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சிவசேனா, அ.தி. மு.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.
அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க காஷ்மீர் மாநிலத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருப்பதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்தநிலையில், இந்த விவகாரம் பற்றி இதுவரை பகிரங்கமாக எதுவும் கூறாமல் இருந்து வந்த பிரதமர் மோடி, நேற்று முதன் முதலாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நேற்று (ஆகஸ்ட் 8) இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்புரிமையை மத்திய அரசு இரத்து செய்ததையும், அந்த மாநிலத்தை பிரித்ததையும் சரியான நடவடிக்கைதான் என்று கூறினார். அதுகுறித்து அப்போது விளக்கமும் அளித்தார்.
மோடி பேசுகையில் கூறியதாவது….
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒன்றை நாடு எடுத்துள்ளது. வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோர் இந்திய ஒற்றுமையில் உறுதியாக இருந்தனர். ஜம்மு-காஷ்மீரின் வரலாற்றில் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது.
மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மக்களை மனதாரப் பாராட்டுகிறேன். தீவிரவாதத்திற்க்கும், ஊழலுக்கும் 370 ஆவது பிரிவு ஊக்கமளித்துக் கொண்டிருந்தது. பயங்கரவாதம் பற்றி எரிய எரிபொருளாக இருந்த 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு இருந்த தடைக்கல் பெயர்த்து எறியப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தால் 42,000 பேர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் ஒன்றரைக் கோடி காஷ்மீரிகள் அதிக பலன்களைப் பெறப்போகிறார்கள்.
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் நாடு முழுவதும் சென்றடையவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை இனி யாரும் தடுக்க முடியாது. எரிவாயு மானியம், கல்விக்கான மானியம், வீட்டுக்கடன் உள்ளிட்ட திட்டங்களை இனி காஷ்மீரிகள் அனுபவிக்கலாம். காவல்துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கான அனைத்து பலன்களும் இனி தடையின்றி வழங்கப்படும். காஷ்மீர் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இனி தங்கு தடையின்றி கிடைக்கும்.
வளர்ச்சியிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்த காஷ்மீர் மக்கள் இனி முன்னேற்றப் பாதையில் பயணிப்பார்கள். மத்திய அரசின் நேரடியான பார்வையில் காஷ்மீர் மற்றும் லடாக் நிர்வாகம் ஊழலின்றி சிறந்து விளங்கும். பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும்.
ஜம்மு-காஷ்மீரில் லட்சக் கணக்கானோருக்கு மறுக்கப்பட்ட வாக்குரிமை வழங்கப்படும். ஜம்மு-காஷ்மீரில் அச்சமின்றி வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படும்; யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது. ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிய பிறகு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என கூறினார்.
இந்தி, தமிழ், தெலுங்கு திரையுலகினரை காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த அழைக்கிறேன். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதால் படப்பிடிப்பு நடத்தலாம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு ஒளிமையமான எதிர்காலம் காத்திருக்கிறது.
காஷ்மீரில் தொழில் தொடங்க வருமாறு தனியார் நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு விடுக்கிறேன். உலகின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக காஷ்மீர் உருவெடுக்கும். மருத்துவ குணங்கள் கொண்ட ஏராளமான தாவரங்கள் காஷ்மீரில் உள்ளன. காஷ்மீரின் உள்நாட்டு தயாரிப்புகள் உலகச் சந்தைகளை நிறைக்க வேண்டும். காஷ்மீரை வளர்ச்சி பெற்ற மாநிலமாக ஆக்குவது இனி மத்திய அரசின் பொறுப்பு.
மேலும் அங்குள்ள குழந்தைகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பாளர்கள். எனது அரசின் நடவடிக்கைகளை பலர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம்; கருத்து வேறுபாடுகளை நான் ஒத்துக்கொள்கிறேன். மாற்றுக்கருத்து கொண்டவர்களுக்கும் வளர்ச்சியில் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுக்கிறேன். பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்கு காஷ்மீர் மக்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது எனவும் பிரதமர் மோடி கூறினார்.