விஜய்சேதுபதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு

நடிகர் விஜய்சேதுபதி இலங்கை விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு எழுதியுள்ள பதிவு…..

இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்துள்ளது.வருத்தத்தைத் தருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி சிறந்த நடிகர்.பண்பாடு மிக்க,மனிதநேயமிக்க
மனிதர்.நடிப்பு அவரது தொழிலாக இருந்தாலும்
சமூக அக்கறையோடும் தமிழின உணர்வோடும் செயல்படுபவர்.

அப்படிப்பட்டவர் முத்தையா முரளிதரன் போன்ற ராஜபக்சேவின் அடிமையின் கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது.

முத்தையா முரளிதரன் கன்டியில் பிறந்து தமிழராக இருந்தாலும்
ஒரு சிங்களராகவே வாழ்ந்து வருபவர்.தமிழர் என்று சொல்வதில் அவமானப்படுபவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னால்,கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் முரளி ‘தனக்கு தமிழ் தெரியாது” என்று சிங்களத்தில் உரையாடிய போது ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்கள் முத்தையா முரளியை தாக்க முற்பட்டார்கள் என்பதெல்லாம் தனி வரலாறு.

சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக்கொண்டிருந்த போது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தவர்.இதை விடக் கொடுமை தமிழினப்படுகொலைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களுக்கு போகாமல், சிங்கள கிராமங்களுக்குப் போய் ஆறுதல் சொன்னவர்.

அதுமட்டுமல்லாது,தென்னிலங்கையில் சிங்களவர்கள் மட்டுமே வசிக்கும் ‘தங்கல்லை”என்ற இடத்தில் இரண்டு சிங்கள கிராமங்களைத் தத்தெடுத்து இருக்கிறார்.

இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு,
முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு, “ அமைதியை நிலைநிறுத்திய ராஜபக்சே” என்று முத்தையா முரளிதரன் பாராட்டினார்.

இனப்படுகொலை நடத்திய ஒரு குற்றவாளிக்கு உறுதுணையாய்
இருக்க கூடிய துரோகி முரளிதரனின் கதாபாத்திரத்தில் தமிழர்களால் அதிகம் நேசிக்ககூடிய விஜய் சேதுபதி போன்ற
சிறந்த நடிகர் நடிப்பதை ஈழத்தமிழர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள்.

ஒரு தமிழினத்துரோகியை உலக அரங்கில் அடுத்த தலைமுறைக்கு
நல்லவனாக-நாயகனாகக் காட்ட முயற்சிப்பது வரலாற்று
பிழையாகத்தான் முடியும்.

இவ்வாறு வன்னியரசு கூறியிருக்கிறார்.

Leave a Response