சமக்கிருதத்தை உயர்த்தி தமிழைத் தாழ்த்தும் பாடப்புத்தகம் – கல்வியாளர்கள் கொதிப்பு

பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிகளின் பாடத்திட்டங்களில் பல்வேறு தவறான் தகவல்களைப் புகுத்தி வரலாற்றை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறதென கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கும் இன்னொரு புரட்டு வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் இந்தாண்டு பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாடப் புத்தகங்களில் தேசிய கீதமே தவறாக அச்சிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. பல வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் தகவல் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் அதிகளவில் காணப்படுவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தின் 142 ஆவது பக்கத்தில் உள்ள பாடம் 5 இல், ‘The Status of Tamil as a Classical Language’ எனும் பாடத்தில், சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி என்றும், தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுக்கு முற்பட்ட மொழி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழியே உலகின் பழைமையான மொழி என்பது மொழியியல் ஆய்வறிஞர்கள் ஒப்புக்கொண்ட கூற்று. மிகப் பழமையான பல மொழிகள் அழிந்துவிட்டாலும், பெருமை மங்காமல் நிலைத்து நிற்கிறது தமிழ் மொழி.

சமஸ்கிருதத்தை திணிக்க நினைக்கும் மோடி கூட, தமிழகத்தில் பேசும்போது, “உலகிலேயே பழமையான மொழி தமிழ் மொழி என்பதில் இந்திய தேசம் பெருமை கொள்கிறது” என்றார்.

அத்தகு பெருமை வாய்ந்த தமிழைத் தாழ்த்தி, சமஸ்கிருதத்தை பெருமைப்படுத்தும் விதமாக தவறான தகவல் பாடப் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

இதற்கு கல்வியாளர்கள் கடும்கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு இந்தத் தவறான தகவலை நீக்குவதோடு நில்லாமல் இவ்வாறு எழுதியவருக்குத் தண்டனை தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Response