ஆளுநரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் கர்நாடகா – திகைத்து நிற்கும் பாஜக

கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். கடும், கூச்சல் குழப்பத்துடன் நேற்று (ஜூலை 19) 8.30 மணி வரை அவை நடைபெற்றது.

திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கர்நாடக மாநிலத்தில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ள 15 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் ஆளும்கட்சி பெரும்பான்மை பலமிழந்தது. முதல்வர் பதவி விலகக்கோரி பாஜவினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் முதல்வர் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு அனுமதி மற்றும் தேதி நிர்ணயம் செய்யும்படியும் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாரிடம் கோரிக்கை வைத்தார்.

அதையேற்றுக்கொண்ட சபாநாயகர் ஜூலை 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்குகோரும் தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்கினார். அதன்படி ஜூலை 18 காலை 11 மணிக்கு பேரவை கூடியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்து பேசினார்.

இடையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பாயிண்ட் ஆப் ஆர்டர் கொண்டு வந்து, ‘‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பத்து பேர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இறுதி தீர்ப்பு வரும்வரை நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.

சித்தராமையா எழுப்பிய சட்டப் பிரச்னையால் பேரவையில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பகல் உணவு இடைவேளைக்கு பின் பேரவை கூடியதும் காகாவாட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சீமந்தபாட்டீலை பாஜவினர் கடத்தி சென்றுள்ளதாக அமைச்சர் டி.கே.சிவகுமார் பிரச்னை எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் வாக்கு வாதமும், மோதலும் ஏற்பட்டது. கடும் பிரச்சினைகளுக்கு இடையே நம்பிக்கை தீர்மானம் மீது கர்நாடக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவிட்டார்.

நம்பிக்கை தீர்மானம் மீது கர்நாடக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருவதால் மீண்டும் மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா 2 ஆவது கெடு விதித்திருந்தார்.

நம்பிக்கை தீர்மானத்தின் மீது மேலும் பல உறுப்பினர்கள் பேச வேண்டியிருப்பதால் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் சபாநாயகர் கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஆளுநரின் உத்தரவை மீறி சபாநாயகர் செயல்பட்டு வருவதால் செய்வதறியாது திகைத்து நிற்கிறது பாஜக.

Leave a Response