வைகோவுக்கு தண்டனை – சீமான் கருத்து

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை அண்ணா மேம்பாலம். அருகே உள்ள ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாகக் கூறி வைகோ மீது இந்திய தண்டனைச் சட்டத்தில் தேச துரோக குற்றம் (123ஏ) மற்றும் இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டும் செயல்பாடு (153ஏ) ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது

நான் குற்றம் சாட்டுகிறேன் புத்தக வெளியீட்டு விழா பேச்சு தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற வழக்கில் 8 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தானே சரணடைவதாகக் கூறி, 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில் 52 நாட்கள் கழித்து மே 25 ஆம் தேதி பிணையில் வெளிவந்தார்.

பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஜூன் 19 ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார்.

அந்த வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்னை கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் அவர் குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்னர்,ஓராண்டு சிறை தண்டனையும் 10000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது…..

இந்நாட்டில் பேசுவதே தேசத்துரோகமா? இத்தீர்ப்பு கருத்துச் சுதந்திரத்தின் மீதான பெரும் தாக்குதல். வைகோ அவர்களின் ஓராண்டு சிறை திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response