ஒரு நாடு – ஒரே சட்டம்!
இரு பெண்கள் – இரு வேறு அணுகு முறைகள்!
முப்பது வருடமாக தமிழகத்தை சூறையாடி, பல லட்சம் கோடிக்கு சொத்து சேர்த்த பெண்மணிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையோ, வெறும் நான்கு ஆண்டுகள்!
தற்போது அதையும் குறைத்து, அவரை விடுதலை செய்யும் நோக்கத்துடன்,நன்நடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்ய கர்நாடக சிறைத்துறை பரிந்துரையாம்!
மற்றொரு பக்கம், 27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி,தன் மகளின் கல்யாணத்திற்காக பரோல் கேட்பதற்கு கோர்ட்டில் நேரில் ஆஜராவதற்கே தடை! – பாதுகாப்பு பிரச்சினை வந்துவிடுமாம்!
நான் விடுதலை புலிகளின் ஆதரவாளனல்ல,
தனி ஈழமோ,தனித் தமிழ் நாடோ வேண்டும் என்ற கருத்தியலுக்கு ஆதரவாளனுமல்ல,- ஒரு இயல்பான தேசப்பற்றுள்ள தமிழனாக இருந்து, இந்த விஷயத்தை பார்க்கிறேன்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கை கவனித்து வரும் யாருக்குமே தெரியும் நளினி ஒரு தீவிரவாதியல்ல,- அவர் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த -தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண்! அவருக்கு விடுதலை புலிகள் இயக்கத்தின் முருகன் மீதான காதலும்,நெருக்கமுமே சிறை வாழ்வை பரிசாக்கியது!
( நளினி குடும்பத்துடனும், நளினியுடனும் மிக நீண்ட கால நெருங்கிய பழக்கமுள்ளவன் நான் என்ற வகையிலும் இதை என்னால்,எந்த தயக்கமுமின்றி உறுதியாகச் சொல்ல முடியும். இந்த கருத்தை சி பி ஐ அதிகாரி நண்பர் ரகோத்தமனிடமும் முன்பே கூறியுள்ளேன்.)
இன்று,ஒரு தாயான நளினி, தன் மகளின் கல்யாணத்திற்கு பரோல் கேட்பதையே பதற்றத்துடன் அணுகும் அதிகாரவர்க்கம்,
சிறை விதிகளையெல்லாம் புறம் தள்ளி, ஷாப்பிங்கெல்லாம் சென்று வந்த சசிகலாவை,நன் நடத்தையின் அடையாளமாக பார்த்து, விடுதலைக்கு சிபாரிசும் செய்கிறது என்றால்..,
இந்தியாவில் நடக்கும் சட்டத்தின் ஆட்சி என்பது, ’’ஆளாளுக்கு ஒரு அளவுகோளை வைத்து தான் பார்க்கும்..’’ என்ற பழிச்சொல் ஏற்படாதா?
நீதிபதி சந்தோஷ் ஹெக்டே முன்பு ஜெயலலிதா விடுதலை விஷயத்தில் சொல்லியது தான் நினைவுக்கு வருகிறது! ’’இந்தியாவில் அதிகாரம் படைத்தவர்களும்,வசதியானவர்களும் சட்டப்படியான தண்டனையிலிருந்து தப்பித்துவிடுவார்கள் என்ற பொது கருத்தை நீதிதுறையிலிருக்கும் நானும் தற்போது நம்பும்படியாகவிட்டது.’’
– சாவித்திரி கண்ணன்.