நள்ளிரவு வரை பஞ்சாயத்து – ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது ஏன்?

மோடி தலைமையிலான பாஜ அமைச்சரவை நேற்று (மே 30,2019) பதவியேற்றது. அதில் தமிழகத்துக்கு இடமில்லை.

தேர்தலில் பாஜக 303 இடங்களில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியானாலும், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்துக் கூட்டணி கட்சிகளும் ஆர்வம் காட்டின. தமிழகத்திலும், பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற ஆர்வம் காட்டினார். இதற்காக, ஓபிஎஸ் கடந்த 25 ஆம் தேதி டெல்லி சென்றபோது மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

அதேபோன்று, அதிமுகவில் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கத்துக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். இருவரின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்று மோடி உறுதி அளித்திருந்தார்.

இதையடுத்து எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் சென்னை திரும்பினர். ஆனால், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் கடந்த 25 ஆம் தேதியில் இருந்து நேற்று வரை (6 நாட்கள்) டெல்லியிலேயே தங்கி இருந்தார். அவருக்கு ஆதரவாக சென்னையில் இருந்தபடி பாஜ மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதே நேரம் முதல்வர் எடப்பாடி ஆதரவாளர்கள், ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கினால், வைத்திலிங்கத்துக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர். இல்லையென்றால் அதிமுகவில் உள்கட்சி மோதல் வெடிக்கும் என்று தெரிவித்தனர். அதேநேரம், தமிழகத்தில் பாஜ வேட்பாளர்கள் 5 பேரும் தோல்வி அடைந்தாலும், கட்சியை வளர்க்க தமிழகத்தை சேர்ந்த யாருக்காவது ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அவரை மாநிலங்களவை எம்பியாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் பாஜவை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காவிட்டால் அதிமுகவில் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க கூடாது என்றும் டெல்லி பாஜ தலைமையை வலியுறுத்தி வந்தனர்.

பாஜ மேலிட தலைவர்களோ தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்று எம்பியாக தேர்வாகியுள்ள ரவீந்திரநாத் குமார் ஒருவருக்கு மட்டுமே மத்திய அமைச்சர் பதவி கொடுக்க முன் வந்தது. வேறு யாருக்கும் இப்போதைக்கு அமைச்சர் பதவி தர முடியாது என்று கூறி விட்டனர். எடப்பாடி ஆதரவாளர்கள் பாஜகவின் இந்த கோரிக்கையை உறுதியாக நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஓபிஎஸ் மகனுக்கு நேற்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி தமிழக அதிமுக கட்சி மேலிட தலைவர்கள் கூறும்போது, “தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே இணை அமைச்சர் பதவி தர பாஜ முன்வந்தது. ஆனால், ஒருவருக்கு வழங்கி மற்றொருவருக்கு வழங்காவிட்டால் கோஷ்டி மோதல் வெடிக்கும் ஆபத்து உள்ளதால் அதை நிராகரித்து விட்டோம். ஆனாலும், எங்கள் கோரிக்கையை பாஜ மேலிட தலைவர்கள் பரிசீலிப்பதாக கூறி உள்ளனர். அதனால், இன்னும் சில மாதங்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும்போது அதிமுக கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது” என்றார்.

தமிழகத்தில் அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் சீட் வழங்க பாஜ மேலிடம் முடிவு செய்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தினார். ஆனால் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். ரவீந்திரநாத்துக்கு கொடுத்தால், டெல்லி மேலிடத்துடன் நெருக்கமாகிவிடுவார். அது தனக்கும், தனது பதவிக்கும் ஆபத்து என்று கருதினார். இதனால் வைத்திலிங்கத்தை அழைத்து உங்களுக்குத்தான் எனது ஆதரவு. தேவைப்பட்டால் பன்னீர்செல்வத்தை வெளியேற்றக் கூட நான் தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இரு தலைவர்களுக்கிடையே மோதல் எழுந்ததால், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்றனர். நள்ளிரவு 1.30 மணி வரை பன்னீர்செல்வத்தை, சமாதானப்படுத்தினர். ஆனால் பன்னீர்செல்வம் விட்டுக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பிரதமரே என் மகனுக்குத்தான் அமைச்சர் பதவி கொடுக்க விரும்புகிறார். நான் எப்படி அதை வேண்டாம் என்று சொல்ல முடியும் என்று கூறிவிட்டார்.

இதனால் அதிகாலை வரை நடந்த சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே டெல்லி செல்வதாக திட்டமிட்டிருந்தனர். அதற்காக டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் இந்த பஞ்சாயத்தால் பயணத்தை ரத்து செய்தனர். ஆனாலும் பஞ்சாயத்தில் தீர்வு கிடைக்கவில்லை. அதிமுக தலைவர்களுக்குள் எழுந்த மோதலில் யாருக்கும் அமைச்சர் பதவி இல்லை என்று பாஜக கை விரித்து விட்டுள்ளதாக அதிமுக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

இவர்களுக்குள்ளான மோதலில் தமிழகத்துக்குக் கிடைத்திருக்க வாய்ப்புள்ள ஒரு அமைச்சர் பொறுப்பும் கைவிட்டுப் போனது என்கிறார்கள்.

Leave a Response