
அதில் வடக்கு மாகாண முதலமைச்சரும் கலந்துகொண்டார். அதன்போது வடக்கு மாகாணத்தில் வருமானம் ஈட்டத்தக்க வகையில் பயங்கரவாதிகள் முன்னர் போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்திருந்தனர். அத்தகைய நடவடிக்கைகளை இப்போது முன்னாள் புலிகள் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாகவே வடபகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதனை மறுத்துப் பேசிய முதலமைச்சர் போருக்குப் பின்னரே வடபகுதியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. இல்லாதவர்கள் மீது குற்றஞ்சுமத்துவதன்மூலம் அத்தகைய குற்றங்களைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் பின்நிற்கிறார்களா என்ற சந்தேகத்தையே உருவாக்கிறது.
தற்போது தமிழகத்திலிருந்து கடல் வழியாக கட்டுப்பாடற்ற வகையில் கேரளக் கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படுகிறது. சிங்களர்களால் மேற்கொள்ளப்படும் இவற்றைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக் காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி அதிலிருந்து தப்பிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.


