பிராமணிய முறையில் தமிழன்னை சிலையா? மண்டியிட ஒரு அளவில்லையா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2013 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், ‘‘அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலை போல் மதுரையில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் 160 அடி உயரத்தில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும். தண்ணீருக்கு நடுவில் அமையும் அந்தச் சிலைக்கு உல்லாச படகுப் போக்குவரத்தும் விடப்படும்’’ என அறிவித்தார்.

இந்நிலையில், ஏப்ரல் 14,2019 அன்று அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் அளித்த பேட்டியில் ‘‘தமிழ் அறிவியல் வளர வேண்டும் என எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசைப்பட்டனர். மதுரையில் 160 அடி உயர தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் மதுரையில் தமிழ்த்தாய் சிலை அமைக்க வாய்ப்பு இல்லை. அதற்குப் பதிலாகத்தான் மதுரையில் ரூ. 36 கோடி மதிப்பீட்டில் உலகத் தமிழ்ச் சங்கம் கட்டப்பட்டது. இந்த சங்க வளாகத்தில் ஒரு சிலை வைப்போம்’’ என்றார்.

ஜெயலலிதா அறிவித்தபடி தமிழ்தாய் சிலை அமைக்க முடியாது என்று 6 ஆண்டுகளுக்கு பிறகு, அதுவும் ஜெயலலிதா மறைந்த பிறகு முதன்முறையாக அமைச்சர் செல்லூர் ராஜூ திடீரென்று அறிவித்திருப்பது கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி அச்சிலை குறித்து தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையும் தமிழர்களுக்குப் பேரரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சாவித்திரிகண்ணன் எழுதியிருப்பதாவது…..

இந்த அளவுக்கு தங்கள் சுய அடையாளத்தையே இழக்கத் துணிந்தவர்களா இந்த ஆட்சியாளர்கள்?

தலைமைக் கழகத்தில் தங்கள் தலைவியின் சிலையைக் கூட ஒழுங்காக வைக்க முடியாத இந்த ஆட்சியாளர்கள் தமிழன்னை சிலையின் வடிவமைப்பிலாவது மோசடி செய்யாமலிருக்கலாமல்லவா?
ஆனாலும், இது ரொம்ப அதிகம் தான்!

ஆட்டுவித்தால் ஆடுகின்ற அடிமை பொம்மைகள் தான் என்றாலும்,கொஞ்சமாவது மனசாட்சி உறுத்த வேண்டாமா? கட்சியின் பெயரில் இருக்கும் திராவிடம் என்ற வரலாற்று அடையாளத்திற்காகவாவது இந்த காரியம் செய்ய இவர்கள் அச்சபட்டிருக்க வேண்டாமா?

ஆள்வது தமிழ் நாட்டை!
வடிப்பது தமிழ்த் தாய் சிலையை.! ஆனால்,வேண்டுவதோ ஆரியத் தாய் வடிவை!

மத்திய ஆதிக்க சக்திகள் கட்டளைக்கேற்ப, தமிழ்த் தாய் சிலையை ஆரியத் தாய் சிலையாகத் தான் வடிப்போம் என அதிகார பூர்வமாக அறிக்கை தரும் துணிச்சல் எப்படி வந்தது இவர்களுக்கு?

தமிழ் நாட்டில் இது வரையிலான தமிழ்ப் பாரம்பரிய வரலாற்று வடிவங்கள் அனைத்தும் மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்களைக் கொண்டு தான் வடிவமைக்கப்பட்டுள்ளன!

வள்ளுவர் கோட்டம்,பூம்புகார் கண்ணகி கோட்டம், தஞ்சை தமிழ்ப் பல்கலை வளாக சிற்பங்கள்..என அனைத்துமே நம் தமிழக சிற்பக் கலைஞர்களின் கைவண்ணங்களே!

இது மட்டுமின்றி, இன்று உலகின் மூலை முடுக்கில் உள்ள மேலை நாட்டாரெல்லாம் நம் தமிழகத்திற்கு வந்து பல கோடி செலவில் நம் பாரம்பரிய கற்ச்சிற்பங்களை ஆர்டர் தந்து, காத்திருந்து தங்கள் நாட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர். மாமல்லபுரம் எங்கும் வியாபித்திருக்கும் எண்ணற்ற சிற்பக் கலைக் கூடங்களே இதற்கு அத்தாட்சி!

கடந்த 30 ஆண்டுகளில் சிற்பக் கலைக்கல்லூரி மாணவ்ர்களாக நான் பார்த்தவர்கள் பலரும் இன்று மாபெரும் கலைஞர்களாக விஸ்வரூபமெடுத்திருப்பதை காண்கிறேன்.

இந்த சொந்த மண்ணின் சிற்பிகளை முற்றாகப் புறக்கணித்துவிட்டு, மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில் அமையவுள்ள தமிழ்த் தாய் சிலையை செய்யப் போகிறார்களாம்…!

என்ன காரணம்?

தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையைலிருந்து மேற்கோள் காட்டி சொல்கிறேன்;

# தமிழன்னை வடிவம் கற்சிலையில் கூடாது. பளிங்கு கல், பைபர்,கண்ணாடி ஆகியவை கொண்டு உருவாக்கப்பட வேண்டும்!

# இத்தாலியில் உள்ள ட்ரிவிபுட்டன் சிலையை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும்!

# வேத கால பிராமணிய முறைப்படியும்,இந்து காலாச்சார மரபை ஒட்டியும் ,சங்க கால முறைபடியும் சிலை வடிக்க வேண்டும்!

இந்த அறிக்கையைத் தயாரித்த அறிவாளி யார் என்று தெரியவில்லை.! ஆனால், அவர் தான் நிச்சயம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கோமாளியாக இருக்க முடியும்!

பளிங்குக் கல்லாலும்,பைபராலும்,கண்ணாடியாளும் உருவாக்கப் படுவது ஒரு போதும் தமிழ்த் தாய் சிலையாக இருக்க முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லை என்பது மாத்திரமல்ல, அன்னிய தேசப் பெண் சிலையை மாடலாக கொள்ளுமாறும் பரிந்துரைக்க முடிகிறதென்றால்..! இதை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

இது போதாதென்று, வேதகால பிராமணிய முறைப்படியும் ,இந்து கலாச்சார முறைப்படியும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

அத்துடன் போனால் போகட்டும் என்று சங்ககால மரபுப்படி செய்யவும் சொல்லப்பட்டுள்ளது.

சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் சாதிப் பிரிவினை இல்லை. சங்க காலம் வேத மரபுடன் தொடர்பில்லாதது, இந்து கலாச்சாரம் என்பது அப்போது இல்லை.

ஆக,ஏன் இப்படிச் சுற்றி வளைத்துக் குழப்ப வேண்டும்? எங்களுக்கு ஆரியத் தாய் சிலை செய்ய வேண்டும் அதற்கு தமிழக சிற்பிகள் லாயக்கற்றவர்கள். அதனால், நாங்கள் வெளி மாநிலத்தவர்களைக் கொண்டு செய்யப் போகிறோம் என சொல்லிவிட்டுப் போகலாமே..!

மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில் அமையவுள்ள தமிழ்த் தாய் சிலை, தமிழ்த் தாயாக இல்லாமல் ஆரியத் தாயாக இருந்தால் அதையும் பார்த்து வாய்பிளந்து செல்லப் போகிறவர்கள் தானே இந்த கேணைத் தமிழர்கள் என்பது தானே அவர்கள் எண்ணம்?

’’விதியே,விதியே தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாயோ..?’’ என்று அன்றைக்கே இதை நினைத்துத் தான் பாடி வைத்தானோ பாரதி?

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response