முள்ளிவாய்க்காலிலும் கூடங்குளத்திலும் போராட்டம் தோற்றுப்போகவில்லை – புகழேந்தி தங்கராஜ்.

தமிழ் இன உணர்வாளரும் இயக்குனருமான புகழேந்தி தங்கராஜ் அவர்கள் கனடா வந்துள்ளார். அவருடனான ஊடகவியலாளர் சந்திப்பு ஜூன் மாதம் 5 ஆம் நாள் 305 Milner வீதியில் அமைந்திருக்கும் கனடியத்தமிழர் தேசிய அவையின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு மண்டபத்தில் மாலை 8 மணிக்கு நடைபெற்றது.

இவ் ஊடகவியலார் சந்திப்பில் கனடிய மண்ணில் உள்ள பல தமிழ் ஊடகவியலாளர்களும் வருகை தந்து கலந்து செவ்வி கண்டார்கள்.

தமிழீழ விடுதலைப் போரை மையமாகக் கொண்ட ‘காற்றுக்கென்ன வேலி’ ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படங்களின் வரிசையில் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கியிருக்கும் அடுத்த படைப்பு, ‘கடல் குதிரைகள்.’

இயக்குனர் புகழேந்தி அவர்கள் தன் உரையில் ஈழத் தமிழ் மக்களின் அவலங்களை படமாக்க முயலும் போது அத்தகைய திரைப்படங்களை பல்வேறு சவால்களை கடந்தே வெளிக் கொண்டு வரும் நிலையே தமிழகத்தில் உள்ளது என்பதை பல்வேறு அனுபவப் பகிர்வுகளோடும் விளக்கி கூறினார்.

தணிக்கைக் குழு எத்தகைய சிக்கல்களை கடந்த காலங்களில் தனது முன்னைய படங்களுக்கு கொடுத்தார்கள் என்பதையும் அதற்காக அவர் எப்படி எதிர்த்து போராடினார் என்பதையும் விபரித்து சொல்லி தமிழகத்தில் உணர்வுள்ள தமிழர்களின் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சித்தரிக்கும் கருத்துகளை விளக்கும் படைப்புகளை படைக்கும் படைப்பு சுதந்திரத்தின் மட்டுப்படுத்தப்பட்ட நிலை குறித்து புரிய வைத்தார். நகைச்சுவையாகவும் அவர் சொன்ன பல சம்பவங்களில் சில:

உச்சிதனை முகர்ந்தால் திரையில் தமிழீழ வரைபடம் சிவப்பு நிலமாக கட்டப்பட்டதற்கு தணிக்கை செய்தார்களாம். வன்முறையை விதைப்பதாக கூறி… பின்பு நிலத்தின் நிறம் சிவப்பாக இருந்தது பச்சையாக மாற்றப்பட்டதாம். ஏற்றுக் கொண்டார்களாம்.

கல்லம் மக்ரே எடுத்த ஆவணக் காட்சி போன்ற ஒரு காட்சியை தத்துவரூபமாக எடுத்திருந்தார்களாம் “உச்சிதனை முகர்ந்தால்” திரையில். அதற்காக பல நடிகர்கள் உயிர் கொடுத்து நடித்து அதிக செலவு செய்து காட்சி படமாக்கப்பட்ட பின் அதை தணிக்கை செய்தார்களாம்.

“கட்டி வைத்து பின்புறமாக தலையில் சுடும் காட்சியில் குண்டு துளைத்து செல்லும் காட்சி ஹொலிவூட் திரைகள் போல் கோரமாக உள்ளது” என சப்பை காரணம் சொன்னார்களாம்.

அதற்கு இயக்குனர் ” அப்படியாயின் நீங்கள் ஹொலிவூட் படங்களை அனுமதிக்கின்றீர்களே? இதை ஏன் அனுமதிக்கக் கூடாது?” எனக் கேட்டு போராடி ஒருவாறாக 50% காட்சி மட்டும் அனுமதிக்கப்பட்டதாம். அந்த திரைப்படத்தில் அந்த காட்சி மாபெரும் இழப்பாக காட்சி தணிக்கை செய்யப்பட்ட சம்பவத்தை வருத்தத்துடன் பகிர்ந்தார்.

இதே போல் இயக்குனர் புகழேந்தி அவர்களின் “காற்றுக்கென்ன வேலி” திரையில் சில காட்சிகள் தணிக்கை செய்த தணிக்கை குழுவினர்கள் தணிக்கைக்கு சொன்ன காரணம் “ஸ்ரீலங்கா இராணுவம் இந்தியாவின் சகோதர இராணுவம். நீங்கள் அவர்களை தவறாக சுட்டி காட்டி இருக்கின்றீர்கள் உங்கள் திரைப்படத்தில். சிங்கள இராணுவம் தமிழ் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சொல்லி அவர்களை அவமானப்படுத்துகின்றீர்கள் அதை அனுமதிக்க முடியாது” என்றார்களாம். உண்மையில் இதை கேட்க எமக்கே சிரிப்பு வந்தது.


“இத்துணை சிக்கல்களை உங்களுக்கு கொடுக்கும் இந்திய திரைப்படத் தணிக்கை குழுவினால் அடுத்த உங்கள் திரைப்படமான ‘கடல் குதிரைகளும்’ தணிக்கை சிக்கல்களுக்கு உள்ளாகுமா?”என கேட்கப்பட்ட போது அவர் அமைதியாக சிரித்தார்.

“கடல்குதிரைகள் கதை என்ன?” எனக் கேட்டபோதும் அதே சிரிப்பு.

“கதையை நான் சொல்லக் கூடாது என்றே இருந்தேன். ஆனால் கனடிய உறவுகளில் நான் வைத்திருக்கும் பாசத்தால் பகிர்கின்றேன்……” எனக் கூறிய இயக்குனர் என்ன பதில் சொன்னார் என்பதை சுருக்கமாக தருகின்றேன்.

அவரின் “கடல் குதிரைகள்” முற்று முழுதாக 5 மாணவிகளை மையமாக கொண்ட கதை.ஐந்து நீச்சல் வீராங்கனைகள் கதையின் நாயகிகள்….கூடங்குளம் இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருந்த மக்கள் போராட்ட களம் கதைக் களமாக எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து மாணவிகளில் நீச்சல் விளையாட்டு தேசியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் நிலையில் அவர்களுள் ஒருத்தியான கிரிசாந்தி குமாரசாமி ஈழத்து பெண் என்பதால் அவர்களின் வெற்றி ஏற்றுக் கொள்ளப்பட மறுக்கப்படுகின்றது.

“2000 மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் அந்நியர்களை எல்லாம் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் வணக்கம் சொல்லி வரவேற்கின்றது. நாமும் சகோதரர்கள் என ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் 20 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த எம் தமிழ் உறவுகளை நாம் மதித்து போற்றி எம் தமிழக மண்ணின் மக்கள் போல் விளையாட்டு கலைகள் படைக்க படிக்க தடை போடுகின்றார்கள். என்ன நியாயம் இது?” என்ற ஆதங்கத்தை சினத்தை படத்திலும் கொட்டி உள்ளதாக சொன்னார்

கிருசாந்தி என்ற பாத்திரத்துக்கு நடிக்கும் பிரசாந்தி தன் பாத்திரத்துக்கு தன்னை வருத்தி நடித்து உயிர் கொடுத்து நடித்துள்ளார் என அறிகின்றோம். அவர் ஈழத்து தமிழச்சியே என்பதால் பாத்திரத்தின் வலி தரும் சவால்களை ஈடு கொடுத்து தன்னை வருத்தி நடித்தார் என கூறினார் இயக்குனர்.

இந்த படத்தில் இன உணர்வாளரும் உயிர்ப்பு குன்றாத நடிகருமான தலைவாசல் விஜய் மற்றும் இயல்பு குன்றாத நடிகை ரோகினி ஆகியோர் ஈழத்து தமிழ் மக்களின் வலியை இயல்பு குன்றாமல் எடுத்து வந்திருக்கும் திரைப்படம் என்பதனை நம்ப முடியும் என்பதை உறுதி கூறி இருந்தார் இயக்குனர்.

இந்த திரைப்படம் தமிழினப் பகைவர்களை தோலுரித்து காட்டுமா?” என கேட்கப்பட்ட கேள்விக்கு.

சிரித்தபடி “தோற்றுப் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு தமிழர் போராட்ட களங்களான கூடங்குளம், முள்ளிவாய்க்கால் இந்த இரு மண்ணிலும் போராட்டம் தோற்றுப் போகவில்லை என பார்க்கின்றேன். அடக்குமுறைகளால் ஒரு மண்ணில் போராடிய மக்கள் விரைந்து ஓய்ந்து போக மாட்டார்கள். போராட்ட குணம் கொண்ட மக்கள் ஒரு போதும் ஓயமாட்டார்கள். மக்கள் போராட்டங்கள் ஒடுக்குமுறைகளால் ஒரு போதும் ஓயப்போவதில்லை. அப்படி ஒரு வரலாறு எங்கிலும் இல்லை. இதனை மனதில் கொண்டு இந்த படத்தில் இவ்விரு மண்ணின் மக்களை பிரதிநிதிப்படுத்தும் சிறுமிகளாக இரு மாணவிகள் நடிக்கின்றார்கள் என்றார்.

சிறப்பு முகாம் பற்றி பேசிய இயக்குனர் புகழேந்தி அவர்கள் விழி கலங்கி அழுது சில உண்மையான உணர்வுகளை பரிமாறிக் கொண்டார்.
கடல் குதிரை என இந்த படத்திற்கு பெயர் வந்ததன் காரணம் கடல் குதிரைகள் சுமார் 450 முட்டைகளை பெண் கடல் குதிரை இட்டுவிட்டு இரை தேடச் சென்றாலும் ஆண் கடல் குதிரைகள் அத்தனை முட்டைகளையும் அடைகாக்குமாம் அது போல் இந்த திரைப்படத்தில் வரும் கதாநாயகன் இந்த 5 வீராங்கனைகளுக்காக மாணவிகளுக்காக தாய்மைப் பண்போடு போராடுகின்றார். அதனால் இந்தப் பெயர்” என்றார்.

— செந்தமிழினி பிரபாகரன்.

Leave a Response