மோடியை கொட்டும் தேனி – மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

தேனி நாடாளுமன்றத் தேர்தல் அ.தி.மு.க வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து இன்று தேனியில் பிரசாரம் செய்கிறார் பிரதமர் மோடி. மேலும், ஆண்டிபட்டி அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன் மற்றும் பெரியகுளம் (தனி) அ.தி.மு.க வேட்பாளர் மயில்வேல் ஆகியோருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்கிறார். இதற்காக, தேனி கானாவிலக்கு அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேடை அருகே தண்ணீர் பிரச்னை காரணமாகப் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கானாவிலக்கு அருகே உள்ளது சண்முகசுந்தராபுரம். தண்ணீர் பிரச்னை தொடர்பாக, பல்வேறு சிரமங்களை சந்தித்துவரும் இக்கிராம மக்களின் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க, வைகை அணை – ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சண்முகாசுந்தராபுரம் கிராமம் சேர்க்கப்பட்டது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்தபோதும், சண்முகாசுந்தராபுரம் கிராமத்துக்குத் தண்ணீர் கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் கிராம மக்கள். எனவே, இன்று தங்களது கிராமம் அருகே பிரதமர் மோடி வருவதை அறிந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் பிரசார மேடை அருகே போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், மதுரை − தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கிராம மக்கள், “கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாகத் தண்ணீர் கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால், இன்றுவரை தண்ணீர் வரவில்லை. இது சம்பந்தமாக அதிகாரிகளை எத்தனையோ முறை சந்தித்தும் எந்தப் பலனும் இல்லை. அதனால் தான் மோடி பிரசாரத்தின்போது போராட்டம் நடத்தினோம். அப்போதாவது எங்கள் பிரச்னை அவர்களுக்குப் புரியட்டும். எங்கள் கஷ்டம் தெரியட்டும்” என்றனர் ஆவேசமாக. சாலை மறியலால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர். இருந்தபோதும், காலிகுடங்களுடன் சாலை ஓரத்திலேயே மக்கள் காத்திருக்கின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காட்சியளிக்கிறது.

இந்தச் செய்தியை மோடியைக் கொட்டும் தேனி என்கிற ஹேஷ்டேக்குடன் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பதிவிட்டுள்ளார்.

Leave a Response