வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட கமல் – கட்சியினர் விமர்சனம்

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் சார்பில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் கையில் டார்ச் லைட்டுடன் டிவி பார்ப்பார் கமல். டிவியில் ஸ்டாலின் பேசுவார், மோடி பேசுவார், இன்னும் பலரின் தேர்தல் பரப்புரை இருக்கும். இதனால் கோபத்துடன் டார்ச் லைட்டைத் தூக்கி எறிந்து டிவியை உடைத்துவிட்டு மக்களைப் பார்த்து கமல் பேசுவார்.

யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? என வரிசையாகப் பேசிவிட்டு இவர்களுக்கா? என்பார், நீ என்னய்யா சொல்வது நாங்கள் பெற்றோர் சொல்வதைக்கேட்டு வாக்களிப்போம் என்று சொல்கிறீர்களா? எனக்கேட்கும் கமல் அதுவும் சரிதான் பெற்றோரைக்கேட்டு வாக்களியுங்கள் எந்தப் பெற்றோரைத்தெரியுமா?

நீட் தேர்வால் தேர்ச்சியடைய முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்டாரே அனிதா, அவரது பெற்றோரைக் கேளுங்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று சொல்வார்கள் என முடித்திருப்பார்.

இதற்கு நீட் தேர்வால் மரணத்தைத் தழுவிய அனிதாவின் அண்ணன் மணிரத்னம் தனது முகநூலில் பதிலளித்துள்ளார்.

அனிதாவின் அண்ணன் மணிரத்னத்தின் முகநூல் பதிவில்….

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் கமலின் உண்மையான ரசிகன் நான்…

நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்..

ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவர். அவரைப் பார்த்துதான் 18 முறை ரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்..

புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமலுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்…

அண்ணன் கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்..

பாசிச பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது, என்பதில்…

அனிதா இறந்த போது “திருமாவளவன்” இதை சும்மா விடக்கூடாது தாங்கள் கூறிய அதே #திருமாதான் எங்கள் தொகுதியின் வேட்பாளர்..

மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்சப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே.

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.

ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் #தலைவர்_திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே என்றும் கமல் ரசிகன்

இவ்வாறு அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அனிதாவின் அண்ணன் மணிரத்னத்தின் முகநூல் பதிவு வேகமாகப் பரவி வருகிறது.

இதனால், தேவையில்லாமல் வாயைக் கொடுத்து திமுக கூட்டணிக்குக் கமல் பலம் சேர்த்துவிட்டார் என்று கமல் கட்சியினரே விமர்சனம் செய்துவருகிறார்கள்.

Leave a Response