கள்ளழகர் அருணாசலேஸ்வரர் கண்ணகியால் தேர்தல் தேதி மாற்றப்படுமா?

2019 ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தேதியில் மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை நடக்கவிருப்பதால் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரையைத் தொடர்ந்து தேனி, திருவண்ணாமலையிலும் இதே கோரிக்கை எழுந்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை விழாவும், சித்திரை மாதத்தில் வரும் சித்திரை வசந்த உற்சவமும் முக்கிய விழாக்களாகும். சித்திரை வசந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வரும் சித்ரா பவுர்ணமியன்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

சித்ரா பவுர்ணமி அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி வருகிறது. அன்று இரவு 7.05 மணிக்கு சித்ரா பவுர்ணமி தொடங்கி மறுநாள் 19-ந் தேதி மாலை 5.35 மணிக்கு நிறைவடைகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

அதே நாளில்தான் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்வார்கள். இதனால் திருவண்ணாமலைக்கு வரும் 9 சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இது குறித்து பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கூறுகையில், “சித்ரா பவுர்ணமியன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதால் வாக்குப்பதிவு முடிந்ததும் அன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதில் மிகுந்த சிக்கல் மற்றும் சிரமம் ஏற்படலாம். இதுவரை 40 தொகுதிகளில் 70 முதல் 75 சதவீதம் வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் சித்ரா பவுர்ணமியன்று தேர்தல் நடப்பதால் வாக்குகள் மிகவும் குறைந்த அளவே பதிவாக வாய்ப்பு உள்ளது. எனவே தேர்தல் தேதி மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது” என்றனர்.

தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சட்ட ரீதியான பரிசீலனை செய்து முன் கூட்டியே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல தேனியில் கண்ணகி கோயில் திருவிழா நடப்பதால் அங்கும் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Response