எழுச்சியுடன் நடந்தது ஏழு தமிழர் விடுதலைக்கான மனிதச் சங்கிலி – அடுத்து என்ன?

ஏழு தமிழர் விடுதலைக்கான மனிதச் சங்கிலிப் போராட்டம் தமிழகம் எங்கும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தேர்தல் பரபரப்பைக் கண்டு கொள்ளாமல், மக்கள் மிகவும் ஆர்வத்துடனும், ஆவேசத்துடனும் இதில் பங்கேற்றுள்ளனர்.

ஏழு தமிழர் விடுதலை என்பதை ஏதோ ஒரு வழக்கு, அதற்கான தீர்ப்பு என்பதாக முடிந்து விடக் கூடிய ஒன்றல்ல. மாறாக அது, தமிழின ஆன்மாவோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். கூடவே தேசிய இனங்களின் இறையாண்மை குறித்த பிரச்சனையும் ஆகும்.

கோபால் கோட்சேயின் விடுதலை, சஞ்சய் தத்தின் விடுதலை, சல்மான் கானின் விடுதலை, தருமபுரி பேருந்து எரிப்பில் மூன்று கல்லூரி மாணவிகளைக் கொன்றவர்கள் விடுதலை என்பவற்றோடு தவிர்க்க இயலாமல், எழுவர் விடுதலை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

இந்த ஒப்பீடு , “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பது, எவ்வளவு போலியான புனிதப் புளுகு என்பதைத் தெளிவாக்கும்.

28 ஆண்டுகள் கழிந்த பிறகும், மனச்சாட்சியே இல்லாமல், குற்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லாமல் அரண்மனை வாசிகள் எவ்வளவு இழிபிறவிகளாக இருக்கிறார்கள் என்பதையும், மனித உணர்வுகள் குறித்து எவ்வளவு அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதையும் அவர்களது கள்ள மெளனம் உலகுக்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

கொஞ்சமோ வஞ்சகங்கள்?

விடுதலை வேண்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தை, அவருக்கு அனுப்பாமலே “குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்து விட்டார்” எனக் கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் மாபெரும் பொய்யை மிகச் சாதரணமாக உள்துறை அமைச்சகம் கூறியது.

விடுதலை செய்வதில் இடர்பாடுகள் ஏதும் உள்ளதா அல்லது இது குறித்து வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா எனப் பேரறிவாளன் கேட்ட விளக்கத்திற்குப் பல மாதங்கள் ஆன பிறகும் ஆளுநர் அலுவலக அதிகாரி பதில் கூறாமல் அழுத்தமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.

ஒரு கையெழுத்துக்காக 6 மாதங்கள் காத்துக் கிடந்தும், கள்ள மௌனம்தான் பதிலாக வருகிறது.

இனிமேலும் காத்திருந்து பலனில்லை.

இவர்களுக்குப் புரியும் மொழியில்தான் இனிப் பேச வேண்டும்.

ஒவ்வொரு கட்சியும் தத்தம் தேர்தல் அறிக்கையை ஆயத்திப் படுத்தி வருகின்றன. ஏழு தமிழர் விடுதலையை உத்தரவாதப் படுத்தாத எந்தக் கட்சிக்கும் ஓட்டு இல்லை என்பதைப் பிரகடனப் படுத்தும் தருணம் வந்து விட்டது.

உப்பரிகையிலே, தந்த கோபுரத்திலே உல்லாசமாக உட்கார்ந்து கொண்டிருந்த ஆளும் தரப்பினரை ஓட்டுக் கேட்க வரும் பொழுது முச்சந்தியில் நிறுத்தி அவர்களைக் கேள்வி கேட்க வேண்டும்.

“நீ என்ன செய்தாய்? நான் என்ன செய்தேன்?” என இலாவணி பாடுவதை உடனடியாக அவர்கள் நிறுத்த வேண்டும்.

உங்களது சாக்கடை அரசியலை இதில் நுழைத்து, 28 ஆண்டுகளாக விடுதலைக்கு . வாடும் அந்தச் சிறையாளர்களைக் கேவலப்படுத்த வேண்டாம்.

மத்திய, மாநில அரசுகள் ஏதும் செய்யப் போவதில்லை. மக்கள்தான் இந்தச் சிக்கலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

மக்கள் சக்திதான் விடுதலையையும், விடியலையும் சாத்தியமாக்கும்.

-கண.குறிஞ்சி

Leave a Response