350 கிலோ எடை வெடிகுண்டோடு இராணுவத்தில் ஊடுருவும் அளவு நாடு மோசமா? – சீமான் வேதனை

புல்வாமா கொடூரத்தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரம் என்று சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,….

ஸ்ரீநகர், புல்வாமாவில் நடைபெற்ற கொடூரத்தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அதில் தமிழர்கள் இருவர் என்பதையறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.

350 கிலோ எடைகொண்ட வெடிகுண்டோடு இராணுவத்தினர் மத்தியில் ஊடுருவி அவர்களைத் தாக்கி அழிக்கிற அளவுக்குத்தான் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு இருக்கிறது என்கிறபோதே நாட்டையாளும் மோடி அரசின் அலட்சியமும், நிர்வாகச் சீர்கேடுமே இத்தனை உயிர்களுக்கு உலை வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.

தேர்தல் நெருக்கத்தில் நிகழ்ந்திருக்கிற இக்கோரச் சம்பவமானது பல்வேறு யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது.

இனியேனும் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறாமலிருக்க மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response