ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் இந்திய அணி – தமிழக வீரர் விஜய்சங்கர் இடம்பெற்றார்

ஆஸ்திரேலிய மட்டைப்பந்தாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது.

இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2 ஆவது 20 ஓவர் போட்டி பிப்ரவரி 27 ஆம் தேதி பெங்களூருவிலும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் முறையே ஐதராபாத் (மார்ச்2), நாக்பூர் (மார்ச்5), ராஞ்சி (மார்ச்8), மொகாலி (மார்ச்10), டெல்லி (மார்ச்13) ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று (பிப்ரவரி 15) அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேசத் தொடர் இது என்பதால் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு அணியைத் தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததால், அதிரடி நடவடிக்கையாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட லோகேஷ் ராகுல், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டார். இந்திய ‘ஏ’ அணிக்கான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

20 ஓவர் அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, புதுமுக சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மயங்க் மார்கண்டே, இங்கிலாந்து லயன்சுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணிக்காக களம் கண்டு 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 21 வயதான மயங்க் மார்கண்டே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஒரு நாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதே சமயம் ரிஷாப் பான்ட் இரண்டு வகையான அணிகளிலும் நீடிக்கிறார். உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் 21 வயதான ரிஷாப் பான்டுக்கே 2–வது விக்கெட் கீப்பருக்கான வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதையே இது காட்டுகிறது.

அதனால் உலகக் கோப்பைப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இதே போல் உலகக் கோப்பையில் மாற்று தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் இருப்பார் என்பதையும் தேர்வு குழு தெளிவுப்படுத்தி இருக்கிறது.

நியூசிலாந்து தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புகிறார்கள். துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவரும் அணியில் தொடருகிறார். நியூசிலாந்து தொடரில் சோடை போன இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஆல்–ரவுண்டர் விஜய் சங்கர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளார் புவனேஷ்வர்குமார் கடைசி மூன்று ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடுவார்.

இந்திய அணி பட்டியல் வருமாறு:–

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, விஜய் சங்கர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயங்க் மார்கண்டே.

முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ‌ஷமி, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷாப் பான்ட், சித்தார்த் கவுல், லோகேஷ் ராகுல்.

கடைசி 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, விஜய்சங்கர், லோகேஷ் ராகுல், ரிஷாப் பான்ட்.

இந்திய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

விஜய் சங்கரின் சமீபத்திய சிறப்பான செயல்பாடு உண்மையிலேயே இந்திய அணியில் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அதனால் தான் அவரை அணியில் சேர்த்துள்ளோம். அடுத்த சில ஆட்டங்களில் அவர் எந்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்துகிறார் என்பதை நாங்கள் பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response