சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நல்ல திட்டத்துக்கு அதிக ஜிஎஸ்டி – குறைக்க வலியுறுத்திய சத்யபாமா எம்பி

ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு, ஒவ்வொரு துறையினரும் தங்கள் துறை சார்ந்த வரியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாகவும், பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாகவும் குறைக்கக் கோரி திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, இன்று 07.02.2019 மக்களவையில் விவாதத்தில் கலந்துகொண்டு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அவர் பேசியதாவது….

உலகின் முதலாவது பூஜ்ய நிலை சுத்திகரிப்புத் திட்டத்தை திருப்பூரிலுள்ள 18% பொது சுத்திகரிப்பு நிலையங்களில் செயல்படுத்தியதன் மூலமாக, மறுசுழற்சி முறையில் தினமும் சுமார் 10 கோடி லிட்டர் சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் சாய ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. 3 ஆவது குடிநீர்த் திட்டம் மூலமாக சாய ஆலைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 9 கோடி லிட்டர் தண்ணீர், பொதுமக்களின் அதிகப்படியான பயன்பாட்டுக்காக தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலைச் பாதுகாக்கும் அற்புதமான இத்திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் அளித்து ஊக்குவிக்கின்றன. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 300 சாய ஆலைகள், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களைப் பயன்படுத்தி வருகின்றன.மொத்தமுள்ள சாய ஆலைகளில்,100 ஆலைகள் தனிப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் கொண்டு இயங்குகிறது.

இத்தகைய தனிப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, பொது சுத்திக்கரிப்பு நிலையங்களுக்கு அளிக்கப்படுவது போன்று 12% ஜி.எஸ்.டி வரி அமலாக்கப்படவில்லை. இதனால், பொது சுத்திகரிப்பு நிலையங்களின் கீழ் இயங்கும் ஆலைகளை மற்ற ஆலைகளை விட 2% அதிக விலை நிர்ணயிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

மேலும் போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு ஆடைகளின் விலை சுமார் 4% சதவீதம் அதிகமாக உள்ளது இதனைச் சமாளிக்க வேண்டுமென்றால், பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12% சத வீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும், பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18% சதவீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும் குறைக்க மத்திய அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Leave a Response