முற்போக்கு முகமூடிக்குள் கன்னட இனப்பற்று – அம்பலப்பட்ட பிரகாஷ்ராஜ்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பிரகாஷ் ராஜுடன் நேர்காணல் நடத்தினார் கார்த்திகைச் செல்வன். மத்திய பெங்களூரூ மக்களவைத் தொகுதியில் போட்டியிட இருக்கும் நீங்கள் இப்போது காவிரிப் பிரச்சினையில், குறிப்பாக மேகதாதூ அணை விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பீர்கள் என நேரடிக் கேள்வி கேட்டார் கார்த்திகைச் செல்வன்.

இதற்குப் பதில் கூறிய பிரகாஷ் ராஜ் இந்தக் காவிரிப் பிரச்சினையை இரு மாநிலங்களும் பேசித் தீர்க்க வேண்டும் என்கிறார். எப்படி இருக்கு கதை? காவிரிப் பூசலை வெறும் திண்ணைப் பேச்சு என நினைத்துக் கொண்டிருக்கிறாரா பிரகாஷ் ராஜ். ஏற்கெனவே ஐம்பதாண்டாகப் பேசித் தீர்வு கிடைக்காமல்தானே நாம் உச்ச நீதிமன்றம் சென்றோம். தமிழ்நாட்டை முழுக்க வஞ்சித்து ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் வழங்கியது. அந்த வஞ்சகத் தீர்ப்பைக் கூட நிறைவேற்றாமல் இருக்கும் கர்னாடகம் செய்வது தவறு எனக் கூட பிரகாஷ் ராஜ் கூற அணியமாக இல்லை.

மேலும் அவர் இரு மாநிலங்களும் காவிரி விவகாரத்தில் அரசியல் செய்கின்றனவாம். இது பிரகாஷ் ராஜின் அடுத்த குறுக்கு வாதம். கேடு செய்பவனையும் கேடு அனுபவிப்பனையும் ஒன்றாக வைத்துப் பேசுகிறார். சிங்களர்களும் ஈழத் தமிழர்களும் அரசியல் செய்கிறார்கள் எனக் கூறுவது போன்றதே பிரகாஷ் ராஜின் கூற்று. அடுத்து தீண்டாமை செய்பவர்களும் தீண்டாமை அனுபவிப்பவர்களும் அரசியல் செய்கிறார்கள் எனச் சொல்வார் போலும்.

மதச்சார்பின்மை, சனநாயகம் பற்றி எல்லாம் வாய் கிழிய முற்போக்கு வசனங்கள் பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது. அவரது முற்போக்கு வேடம் இந்த நேர்காணலில் சந்தி சிரித்தது.

பார்க்கப் போனால் காவிரிப் பூசல் விவகாரத்தில், மோதியின், ராகுலின், எடியூரப்பாவின், குமாரசாமியின் குரலையே எதிரொலிக்கிறார் பிரகாஷ் ராஜ்!

பிரகாஷ் ராஜைப் பொறுத்த வரை அவரது நடத்தை நேர்மையானதே. அவர் என்னதான் மதவாத எதிர்ப்பு என்றெல்லாம் நீட்டி முழக்கினாலும், இனநலன் என்று வரும் போது, முழுக் கன்னடனாக நடந்து கொள்கிறார். வாழ்த்துகள் பிரகாஷ் ராஜ்!

உங்களின் இனநலன் சார்ந்த நேர்மையில் ஒரு துளி கூட எங்களின் திராவிடத் தலைவர்களுக்கு இல்லையே பிரகாஷ் ராஜ்!

– நலங்கிள்ளி

Leave a Response