ஊத்துக்குளி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை – நிறைவேற்றிய சத்யபாமா எம்பிக்கு பாராட்டு

திருப்பூர் மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை, பாலக்காடு – திருச்சி பயணிகள் ரயில் வண்டி ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது.

இதற்கு அனுமதி வழங்கக் கோரி திருப்பூர் எம்.பி., சத்தியபாமா கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது அத்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் நேரில் வலியுறுத்தினார்.

இதையடுத்து, ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் PGTN-TPJ (பாலக்காடு டவுன் – திருச்சிராப்பள்ளி விரைவு பயணிகள்) ரயில் வண்டி (எண் 56712) காலை 9.24 மணிக்கு வருவது, காலை 9.25 மணிக்கு ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 27.01.2019 அன்று காலை 9.25 மணிக்கு ஊத்துக்குளி ரயில் நிலையத்திற்கு வந்த பாலக்காடு – திருச்சி பயணிகள் ரயில் வண்டியை திருப்பூர் எம்.பி சத்யபாமா கொடி அசைத்துத் தொடக்கி வைத்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர் பெருந்துறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி வெங்கடாச்சலம் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் ஆகியோர் இருந்தனர்.

முதலாவது நாள் 36 பயணிகள் ஊத்துக்குளி ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்தார்கள்.

அப்போது சத்யபாமா எம்.பி கூறியதாவது….

ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் (சரக்கு மற்றும் ஊரக) நின்று செல்ல ஏதுவாக நடைமேடை இரண்டையும் பெரிதாக்க முதற்கட்டமாக, நடைமேடை 280 மீட்டராக உயர்த்தப்பட்டு, 24 ரயில் பெட்டிகளை உள்ளடக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்கிற எனது கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை அனுமதி வழங்கி உள்ளது.
அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

மேலும், CBE-MAS பகல்நேர இண்டர் சிட்டி ரயில்வண்டி (எண்கள்12680/12679) ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் ஒரு மணித்துளி நின்று செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கோரிக்கைகளை சாத்தியமாக்கிய ரயில்வே அமைச்சர் அவர்களுக்கு ஊத்துக்குளி மக்களின் சார்பாக நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றித்தந்த சத்யபாமா எம் பி க்கு பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

Leave a Response