தமிழீழம் சிவக்கிறது நூலை மீட்டு கருத்துரிமை காப்போம் – பியூசிஎல் உறுதி

பழ.நெடுமாறன் எழுதிய ‘தமிழீழம் சிவக்கிறது’ நூலின் பிரதிகளை அழிக்க ஆணையிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்த பியூசிஎல் அறிக்கை….

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள், இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டம், 1989 ஆம் ஆண்டு கால கட்டத்தின் போர் நிலவரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, 1993 ஆம் ஆண்டு ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார்.

2002 ஆம் ஆண்டு, இந்தப் புத்தகத்தின் 1709 பிரதிகள் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட இருந்த நிலையில், நூலாசிரியர் பழ. நெடுமாறன் அவர்களும், புத்தகங்களை வைத்திருந்த சாகுல் அமீது அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசதுரோகக் குற்றப்பிரிவு 124 (ஏ), 153 (பி) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பிரிவு 10 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு, தமிழக அரசின் 2004 ஆம் ஆண்டின் அரசாணையின்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் 505 பிரிவும் சேர்க்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி, வழக்குத் திரும்பப் பெறப்பட்டு, மேற்கண்ட இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், புத்தகங்கள் திருப்பித் தரப்படவில்லை.

எனவே பறிமுதல் செய்யப்பட்ட 10 இலட்சம் ரூபாய் மதிப்புடைய நூல்களைத் திரும்பத் தரக்கோரி, நூலாசிரியர் பழ. நெடுமாறன் அவர்கள், சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, 2007 மார்ச் 2 ஆம் நாள் இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து பழ. நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை அதே ஆண்டில் தாக்கல் செய்தார்.

11 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், கடந்த 14.11.2018 அன்று தீர்ப்பு வெளியானது. ‘தமிழீழம் சிவக்கிறது’ நூல், இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாலும், புத்தகங்கள் திருப்பியளிக்கப்பட்டால், அவை மக்களுக்குச் சென்று சேர்ந்து, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதாலும், இம்மனுவைத் தள்ளுபடி செய்து ஆணையிட்ட உயர்நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு, 452-ன் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி, இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் உடனே சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அழித்து விடுமாறும் ஆணையிட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மனு தள்ளுபடி செய்யப்படுவது இயல்பானது. ஆனால் புத்தகங்களை அழித்து விட ஆணையிட்டது விந்தையாக உள்ளது. குறிப்பிட்ட புத்தகத்தின் உள்ளடக்கத்தில் எவரும் வேறுபாடு கொள்ளலாம். ஆனால், அதில் என்ன எழுதப் பட்டுள்ளது என்பதையே மக்கள் தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது ஏற்கத்தக்கதல்ல. வெளியிடப்பட்ட புத்தகத்தின் மீது தடையெதுவும் இல்லாத சூழலில், புத்தகத்தின் உள்ளடக்கம் என்னவாக இருந்தாலும், அதைப் படித்துத் தேவையான கருத்துக்களை எடுத்துக் கொள்ளும் பகுத்தறிவு கற்றவர்களுக்கு உண்டு என்று நம்புவதே நாகரிகச் சமூகத்தின் சிந்தனையாக இருக்க முடியும்.

இந்திய அரசமைப்புச் சட்டம், 19 ஆவது பிரிவின் கீழ் குடிமக்களுக்குக் கருத்து உரிமை, பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி நீதிமன்றத் தீர்ப்புகளும் வெளிவந்துள்ளன. இந்தியா சுதந்தரம் அடையும் முன்பு, அந்நியரான ஆங்கிலேயர் ஆட்சியில் கூட, அரசின் கட்டமைப்பை மாற்ற வேண்டும், தூக்கி எறிய வேண்டும் என்று பேசியவர்களின் கருத்துரிமையை நீதிமன்றங்கள் தூக்கிப் பிடித்த எடுத்துக்காட்டுக்கள் (Krishna v. Emperor, AIR 1935 Cal 636; Niharendu Dutt Majumdar v. Emperor, AIR 1942 FC 23) உண்டு. சுதந்தர இந்தியாவில், அரசின் முக்கியக் கொள்கையான இட ஒதுக்கீட்டை விமர்சித்த ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்ற தமிழ்ப் படத்தின் U சான்றிதழை ரத்து செய்ய மறுத்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த வரலாறு (S. Rangarajan Etc vs P. Jagjivan Ram on 30 March, 1989) இங்கு உண்டு.

2016ல், தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ மற்றும் அதன் ஆங்கில வடிவான ‘One Part Woman’ புத்தங்களைப் பறிமுதல் செய்ய மறுத்து, “படிப்பதற்கான முடிவு எப்போதுமே வாசகருடையது. ஒரு புத்தகத்தை நீங்கள் விரும்பவில்லையெனில், தூக்கி எறியுங்கள்” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது நமக்கு நினைவிருக்கும்.

கடந்த செப்டம்பரில்தான் “நாம் ஒரு சர்வாதிகார நாட்டில் வாழவில்லை. சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோம். சுதந்தரமாக நமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு” என்று மலையாள புத்தகமான ‘மீசா’ விற்குத் தடைவிதிக்க மறுத்து, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து, கருத்துரிமையை உயர்த்திப் பிடித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே அரசிடமிருக்கும் ‘தமிழீழம் சிவக்கிறது’ புத்தகங்களை அழிப்பது என்ற சென்னை உயர் நீதிமன்ற ஆணை, கருத்துரிமையைக் காப்பதற்கு எதிரான முன்னுதாரணமாக மாறிவிடும் ஆபத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் பொழுது, கருத்துரிமை காக்கப்பட்டு உரிய நீதி கிடைக்கும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) உறுதியாக நம்புகிறது.

– கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர் க.சரவணன், மாநிலப் பொதுச் செயலர்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response