இருநாட்களுக்குக் கனமழை – வானிலை அறிவிப்பால் 11 மாவட்ட மக்கள் கலக்கம்

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பர் 18 ஆம் தேதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருப்பதாகவும், அது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் நவமபர் 20 ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (இன்று) அது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கும்.

பின்னர் மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இது புயலாக மாற வாய்ப்பு இல்லை. அதிகபட்சமாக தாழ்வு மண்டலமாகவே தமிழகப் பகுதிகளைக் கடந்து செல்லும்.

இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும் பெய்யும். குறிப்பாக தமிழகத்தில் காஞ்சீபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடைவெளிவிட்டு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 21-ந்தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

வடகிழக்கு பருவமழை தள்ளிப்போகுமா? என்று அவரிடம் கேட்டதற்கு, ‘வடகிழக்கு பருவமழை அக்டோபர்-டிசம்பர் வரை என்பது கணக்கீட்டுக்காக நிர்ணயிக்கப்பட்டது. சில நேரத்தில் ஜனவரி மாதம் 15-ந்தேதி வரை கூட தள்ளிப்போகும். காற்றின்போக்கு, உருவாகக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகியவற்றை கொண்டு தான் வடகிழக்கு பருவமழையை கணக்கிட முடியும்’ என்றார்.

கஜ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட்ங்களில் மேலும் இரு நாட்களுக்கு மழை என்பது அம்மாவட்ட மக்களுக்கு மேலும் சோதனையாக அமைந்துள்ளது.

Leave a Response