
ஈரோடு பேரிடர் மீட்பு இயக்கம் கஜ புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு உதவக் களமிறங்கியிருக்கிறது.
அவ்வியக்கம் சார்பில் கண.குறிஞ்சி,ப.இரத்தினசாமி,கணியன்பாலன்,பிரதீப்,
தி.கு.பழனிச்சாமி,
கு.இரவிச்சந்திரன், ஆ.கிருட்டிணன் ஆகியோர், ஈரோடு மாவட்ட மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில்…..
பேரிடர் மீட்பும் மக்கள் பங்களிப்பும்
கஜா புயலின் பேரழிவுக் காட்சிகள் மிகுந்த பதற்றத்தைத் தருகிறது. பார்ப்பவர்களுக்கே இந்த நிலை என்றால், அனுபவிப்பவர்களது அவலத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
பெண்கள், குழந்தைகள் ஆகியோரது கண்ணீர் நம்மை உலுக்குகிறது.
அரசாங்கத்தை மட்டும் நம்பிப் பயனில்லை. மக்களிடம் உதவியை நாட வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது. அப்படித்தான் ஒரு முயற்சியை நாங்கள் ஈரோட்டில் தொடங்கி உள்ளோம்.
தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட முன்னெடுப்புகள் பரவலாக்கப்பட வேண்டும். பொதுவான பெயரில் அனைத்து இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு உதவிப் பணிகளை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.
சில இடங்களில் அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி உள்ளது பாராட்டத் தக்கது.
எதைச் செய்தாவது மக்களைக் காப்பாற்றியாக வேண்டும்.
பாதிப்பின் வீச்சு தாமதமாகத்தான் பிற பகுதிகளுக்குத் தெரிய வந்துள்ளது. புயல் பாதிப்பு கேரளத்தில் ஏற்பட்ட பொழுது, அனைத்து இந்தியாவிற்கும் அச்செய்தி கொண்டு செல்லப் பட்டது. அப்படிப்பட்ட வேகம் தமிழ்நாட்டில் இல்லாமற்போனது மிகுந்த துயரத்தை உண்டாக்குகிறது.
டெல்டா பகுதி மக்களும், தமிழ் மக்களே. அவர்களது துயரைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது மனச்சாட்சியற்ற செயலாகும். நாம் மிகப் பெரிய தியாகம் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற சிறு சிறு உதவிகளைச் செய்தால் கூடப் போதும். துயருறும் மக்களுக்கு அது பேருதவியாக இருக்கும்.
யானைக்கு ஒரு கவளம். ஆனால், எறும்புகளுக்கு அது பெருவிருந்து.
நமது மனித நேயத்தைச் செயலில் காட்டுவோம். அல்லலுறும் மக்களை மீட்போம்.
இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
ஈரோடு மைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மல்லிகை
அரங்கம் நுழைவாயிலில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சலவை சோப்புகள்,பால் பவுடர், பிஸ்கட், போர்வை, படுக்கை விரிப்புகள், மெழுகுவர்த்திகள், தார்பாலின் உள்ளிட்ட பொருட்களை வழங்கலாம் என்றும் பணமாகத் தரவேண்டாம் என்றும் கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.


