சென்னைக்கு நிம்மதி தந்த வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அடுத்து வரும் 3 தினங்களில் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரங்களில் சற்று வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகரும். வரும் 20-ம் தேதி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் மற்றும் புதுவை கரையை ஒட்டி நிலைகொள்ளத் தொடங்கும். இதன்காரணமாக வரும் 19-ம் தேதி கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும். பின்னர் 20, 21 தேதிகளில் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.

கனமழையைப் பொறுத்தவரை 19-ம் தேதி வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

20-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழைப்பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் 18-ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல், 19-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும், 20-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்யக்கூடும். பின்னர் 19-20 தேதிகளில் மிதமான மழைப் பெய்யக்கூடும்”.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதா? புயலாக வர வாய்ப்புண்டா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பாலச்சந்திரன், ”தற்போதைய நிலையில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு. புயலாக வர வாய்ப்பில்லை” என்றார்.

இதனால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Response