பாரதியாரின் 97ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரனாரின் 61ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று 11.09.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இருவரது திருவுருவப்படங்களுக்கும் சீமான் மலர் தூவி சுடரேற்றி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி உள்ளிட்ட ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்று புகழ்வணக்கம் செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,
விடுதலைப்பாக்களை இம்மண்ணிற்குத் தந்த மகத்தான கவிஞன் பெரும்பாவலர் எம் பாட்டன் பாரதிக்கும், சாதிய இழிவைத் துடைத்தெறிய, வருணாசிரமக் கட்டமைப்பைத் தகர்த்துச் சமனியச்சமூகம் அமைக்கப் போராடிய பெருந்தமிழர் எங்கள் ஐயா இம்மானுவேல்சேகரனார் ஆகிய இருவரது நினைனைவைப் போற்றுகிற இந்நாளில் தமிழ்த்தேசிய இனப் பிள்ளைகள் சாதி, மத உணர்ச்சிகளைக் கடந்து ‘நாம் தமிழர்’ என்கிற தேசிய இன உணர்விற்குள் கலந்து சமனியச்சமூகம் அமைக்க உறுதியேற்கிறோம். அதுதான் அந்த மகத்தான முன்னோர்களுக்கு நாம் செலுத்துகிற உண்மையான புகழ் வணக்கமாக இருக்கும்.
எழுவர் விடுதலையில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பானது 27 ஆண்டுகளாக நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாகக் கிடைத்திருக்கிற ஒரு நல்வாய்ப்பு.
அதனைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள ஆளுநருக்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். எழுவரின் விடுதலை என்பது தமிழக அமைச்சரவையின் உணர்வு மட்டுமல்ல! ஒட்டுமொத்தத் தமிழின மக்களின் உணர்வு. அந்த உணர்வின் பிரதிபலிப்பாக உயிர்த் தியாகங்களும், இன்னல்களைத் தாங்கிய எண்ணற்றப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
கால் நூற்றாண்டு கண்ணீர் போராட்டம் இது. ஆகவே, இந்த உணர்வினை அவமதித்துத் தமிழக ஆளுநர் காலம்தாழ்த்தாமல் உடனடியாகத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுகிற பட்சத்தில் காலநீட்டிப்பு செய்தால் தமிழர் நிலம் முழுமைக்கும் போராட்டக்களமாக மாறும். அத்தகைய சூழலை ஏற்படுத்தாமல் ஆளுநர் அவர்கள் தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதலை அளித்து எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டும்.
இன்றைக்குக் காங்கிரசின் தலைவர்கள் யாவரும் இவ்விவகாரத்தில் அமைதி காக்கின்றபோது அதன் செய்தித்தொடர்பாளர், தமிழகம் தீவிரவாத தேசம் போலக் கருத்தைத் தெரிவிக்கிறார்.
வடஇந்தியாவில் குண்டுவெடித்தபோது கிரிக்கெட் ஆடவந்த இங்கிலாந்து அணி நாடு திரும்பிவிட்டது. அதன்பிறகு இந்தியாவில் எங்குக் கிரிக்கெட் நடத்தலாம்? எது அமைதியான மாநிலம்? எனக் கணக்கிடுகிறபோது தமிழகத்தைத் தேர்வுசெய்தார்கள். இந்திய நிலப்பரப்பிலே தமிழகம்தான் அமைதியான இடம் என்பதால் தேர்வுசெய்தார்கள்.
விளையாட்டின்போது அமைதியான நிலப்பரப்பாக இருந்த தமிழகம் இப்போது பயங்கரவாதிகளின் பூமியாகிவிட்டதா? ஆகவே, தமிழகத்தின் மீது திட்டமிட்டுச் சுமத்தப்படுகிற வீண்பழி. இதனைத் துடைத்தெரிய வேண்டியது முதல் கடமையாகும். எழுவர் விடுதலைக்கெதிராக யார் யாரெல்லாம் கருத்துத் தெரிவிக்கிறார்களோ, அவ்விடுதலையை எதிர்க்கிறார்களோ அவர்கள்தான் தமிழினத்தின் எதிரிகள்; துரோகிகள். அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிற தவறை இனியும் செய்யாது அவர்களைத் தேர்தல் களத்தில் வீழ்த்த வேண்டும்.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.