தெலுங்கனுக்கு உள்ள உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே – பாரதியார் இப்படியும் எழுதியிருக்கிறார்

தெலுங்கனுக்கு உள்ள உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே…!

‘தமிழ்க்கவி’ சுப்பிரமணிய பாரதியார் வேதனை!

சென்ற வெள்ளிக்கிழமை (1917) சூன் 1 யன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் சபாநாயகர் ஸ்ரீ வெங்கடப்பய்ய பந்துலு செய்த உபந்யாஸம் கவனிக்கத் தக்கது. ராஜநீதி சாஸ்த்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார்.

பாடலிபுத்ர நகரத்தில் நடந்த ஆந்திர ராஜ்யமும் பிற்காலத்தில் தமிழ் நாட்டைக் கட்டியாண்ட விஜயநகரத்து ராஜ்யமும் கீர்த்தி மிகுந்தனவன்றோ? தெலுங்கர் தமிழரை ஆண்ட அடையாளங்கள் நமது பாஷையிலும் ஆகாராதிகளிலும் அழிக்க முடியாதபடி பதிந்து கிடக்கின்றன. நமது ஸங்கீதமும் நாட்டியமும் தெலுங்கிலேயே இன்றுவரை முழுகிக் கிடக்கின்றன.

பாடகர்கள் பாடும் கீர்த்தனங்கள், தாசிகள் ஆட்டத்தில் பாடும் வர்ணங்கள் ஜாவளிகள் முதலியவற்றில் நல்ல உருப்படியெல்லாம் தெலுங்கு. நமது கிராமங்களிலுள்ள தெலுங்க ரெட்டிகளும், நாயுடுமாரும், ஆந்த்ர பிராமணப் புரோகிதர்களும், தெலுங்கு தாசிகளும் ராயர் சம்ஸ்தான காலத்தில் இங்கே உறுதி பெற்றவர்கள். நமது விவாக காலங்களில், பாடும் பத்யம், லாலி முதலானதெல்லாம் தெலுங்கு முறை.

நமது பாஷையில் “கவனம்”, (ஆழ்ந்து நோக்குதல்) “ஜொகுஸு”, “எச்சரிக்கை”, “துரை”, “வாடிக்கை”, “கொஞ்சம்” முதலிய பதிற்றுக்கான தெலுங்குச் சொற்கள் சேர்ந்திருக்கின்றன…. இக்காலத்திலும் கூடத் தெலுங்கு தேசத்தார் தமிழரைக் காட்டிலும் ராஜாங்க வ்யவஹாரங்களில் தீவ்ர புத்தி செலுத்துகிறார்கள். ஆனால் நமக்குள் ஜாதி பேதமிருக்கிறது என்றால் ஜாதிபேதம் இந்தியாவில் மாத்திரமில்லை. உலகத்தில் எல்லா தேசங்களிலும் இருக்கிறது. இந்தியாவில் கொஞ்சம் தீவ்ரமாகவும், விநோதமாகவும், மாற்றுவது கஷ்டமாகவும் இருக்கிறது. இப்போது பூமி முழுவதிலும் நடந்து வரும் மஹாப்ரளயத்தில் இந்த ஜாதிபேதம் தவிடு பொடியாய்ப் போய்ப் புதிய மாதிரி உண்டாகும்.

இதுவெல்லாம் ஏன் சொல்ல வந்தேனென்றால், தமிழ்நாட்டு ஜனங்கள் வீண் சண்டைகளிலே பொழுது போக்குகிறார்கள். தெலுங்கர் ஜனபிவிருத்திக்கு வழியாகிய நல்ல உபாயங்களிலே புத்தி செலுத்தி வருகிறார்கள். சுதேசிய விஷயத்தில் இப்போது தெலுங்கருக்குள் இருக்கும் பக்தி சிரத்தையிலே நாலிலொரு பங்கு கூடத் தமிழ் ஜனங்களிடம் இல்லை.

சென்ற வெள்ளிக் கிழமையன்று கூட மேற்படி நெல்லூர் ஆந்த்ர மஹாசபைப் பந்தலில் வந்தே மாதரம் என்ற கோஷம் அபரிதமாக இருந்ததென்று தந்தி சொல்லுகிறது. கொஞ்ச காலத்துக்கு முன்பு கூட நெல்லூரில் கூடிய மாஹானசபையில் ‘வந்தே மாதரம்’ பாட்டுக் கூடப் பாடவில்லை யென்று கேள்விப்பட்டேன். தெலுங்கு ஜில்லாக்களில் ஒரு சபை கூட அப்படி நடந்திராது.

இது நிற்க, மேற்படி சபையில் ஸ்ரீ வேங்கடப்பய்யா சபாநாயகராகப் பேசிய வார்த்தையின் ஸாரம் பின் வருமாறு:
1. தெலுங்கு தேசத்தைத் தனி மாகாணமாகப் பிரிக்க வேண்டும்.
2. இந்தியாவுக்குத் தன்னாட்சி கொடுக்க வேண்டும்.
3. இயன்ற வரை, இந்தியா முழுவதையும் பாஷைகளுக்குத் தக்கபடி வெவ்வேறு மாகாணமாக்க வேண்டும். அதாவது மதராஸ், பம்பாய், ஐக்ய மாகாணம், மத்ய மாகாணம், பஞ்சாப், பங்காளம் என்ற பிரிவுகளை மாற்றித் தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மாராட்டிய நாடு. கன்னட நாடு, ஹிந்துஸ்தானம், வங்கநாடு என்று பாஷைக்கிரமப்படி வகுக்க வேண்டும்.
4. ஸ்வபாஷைகளில் கல்விப் பயிற்சி செய்விக்க வேண்டும். ராஜ்ய காரியங்களும் இயன்ற வரை ஸ்வபாஷையில் நடக்க வேண்டும்.

மேற்படி நாலம்சங்களில் முதலாவது, மூன்றாவது, நாலாவது இம்மூன்றும் ஒரு பகுதி; இரண்டாவது மற்றொரு பகுதி. இரண்டாவது தாய்ப்பகுதி; மற்றவை கிளைப் பகுதிகளாகும். என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கொண்ட கொள்கை யெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது…

மேலும், தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை. தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.

பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி. தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி… தேவாரத்திலும், திருவாசகத்திலும், திருவாய் மொழியிலும், திருக்குறளிலும், கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை…

மேற்படி கட்டுரை சுதேசிமித்திரனில் 9.6.1917இல் ‘தெலுங்க மஹா சபை’ எனும் தலைப்பில் ‘சக்தி தாஸன்’ எனும் புனைப்பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது. சேர,சோழ, பாண்டிய மூவேந்தரின் தமிழர் ஆட்சிக்கு பிறகு விசய நகரப் பேரரசு தமிழகத்தில் நிலை கொண்டது. பிரித்தானியர் ஆட்சியிலும் கூட தெலுங்கரின் ஆதிக்கம் தமிழகத்தில் ஓங்கி வளர்ச்சி பெற்றது. அதன் மூலம் தமிழர் பண்பாட்டிலும், மொழியிலும் சில கலப்புகள் நிகழ்ந்தது. அதுமட்டுமின்றி, அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழர்களுக்கு இன உணர்ச்சி ஏற்படுவதற்கு முன்பே 1912இல் தெலுங்கர்கள் ‘ஆந்திர மகாசபை’ அமைத்து தெலுங்கு இன உணர்ச்சி வளர்த்துக் கொண்டார்கள். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியதோடு மொழிவழி அடிப்படையில் மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை எழுப்பினார்கள். ஆனால் மிகத் தாமதமாகவே இக்கோரிக்கையானது 1938இல் இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழர்களிடத்தில் ஏற்பட்டது. அதுவும் கூட 1939க்குப் பிறகு ‘திராவிட நாடு’ பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. தற்போது தமிழர்கள் முகத்தில் திராவிட, இந்திய முகமூடிகள் மாட்டப்பட்டு விட்டது. இவ்விரண்டையும் கழற்றி எறியாத வரை தமிழர்களுக்கு எப்போதும் வாழ்வில்லை என்பதைத்தான் சுப்பிரமணிய பாரதியாரின் கட்டுரை நமக்கு உணர்த்துகிறது. சுப்பிரமணிய பாரதியாரின் வரலாற்று வழியில் தவறாக புரிந்து கொண்ட இந்து மதக் கண்ணோட்டத்தை புறந்தள்ளி விட்டு அவரின் மொழிவழி தேசிய இனங்களின் சமத்துவ சிந்தனையை ஒவ்வொரு தமிழரும் ஏற்றிப் போற்றிடுவோம்!)

‘தமிழ்க்கவி’ சுப்பிரமணிய பாரதியார் நினைவு நாள் 11.9.1921.

– கதிர்நிலவன்

Leave a Response