கலைஞர் புகழஞ்சலிக்கு அமித்ஷா அழைக்கப்பட்டது ஏன்? – சுபவீ விளக்கம்

திமுக நடத்தவிருக்கும் கலைஞர் புகழஞ்சலிக் கூட்டத்துக்கு பாசக தலைவர் அமித்ஷா அழைக்கப்பட்டிருப்பதை ஒட்டி பலத்த விவாதங்கள் நடக்கின்றன.

அதுகுறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அளித்துள்ள விளக்கம்…..

வரும் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும், தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் வணக்கம் கூட்டத்தில் பாஜகவின் தலைவர் அமித்ஷா அழைக்கப்பட்டுள்ளார். அவரும் ஒப்புதல் தெரிவித்து அழைப்பிதழும் வெளிவந்துவிட்டது. அதனையொட்டி, ஊடகங்கள் முழுவதும் அது குறித்தே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

திமுகவும், பாஜகவும் நெருங்கி வருகின்றன என்பதற்கான அடையாளமே இது என்று சிலர் தங்கள் கருத்தைப் பதிவிடுகின்றனர். திமுகவின் நற்பெயருக்கும், நம்பகத்தன்மைக்கும் கேடு விளைவிக்கக்கூடிய கருத்தாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

தில்லியிலும், அண்டை மாநிலங்களிலும் எதிரெதிர்க் கட்சியினர் கூட, பண்பாட்டு நிகழ்வுகளிலும், துக்க நிகழ்ச்சிகளிலும் கட்சி எல்லையைக் கடந்து ஒன்று கூடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான், அந்த நாகரிகத்தைப் பார்க்க முடியவில்லை. எல்லாவற்றிலும் இங்கு கட்சி அரசியலே தலைதூக்கி நிற்கிறது என்று பலரும் குறை கூறுவதைக் கேட்டுள்ளோம். இன்று அனைத்துக் கட்சிகளும் ஒரு மேடைக்கு வந்து, மறைந்த தலைவரின் நினைவுகளைப் பகிர்ந்துகொல்வதைக் கண்டு வரவேற்று மகிழாமல், இதற்கும் ஓர் அரசியல் நோக்கம் கற்பிப்பது சரிதானா?

இந்த விமர்சனம் சரியானது இல்லையென்றாலும், இது தொடர்பாக வைக்கப்படுகின்ற இரண்டு வினாக்களுக்கு நாம் விடை சொல்ல வேண்டியுள்ளது. சென்ற ஆண்டு தலைவரின் பிறந்த நாள் விழாவிற்கு பாஜக அழைக்கப்படவில்லை. இப்போது மட்டும் ஏன் என்பது ஒரு வினா. பாராட்டு விழாவிற்கு அனைவரையும் அழைக்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு துயரம் என்று வரும்போது அனைவரையும் அழைப்பதில் எந்தப் பிழையுமில்லை. தலைவர் இறந்தபோது பிரதமரே இங்கு வந்தார். அதே போல, வாஜ்பாய் இறந்தபோது தளபதி அங்கு சென்றார். இது நல்ல பண்பாடுதான்.

இந்த இடத்தில் இன்னொரு வினாவும் முன்வைக்கப்படுகிறது. துக்கத்தில் கட்சி பார்க்க வேண்டாமென்றால், புகழ் வணக்கக் கூட்டத்திற்கு அதிமுக வையும் அழைத்திருக்கலாம் இல்லையா என்பதே அவ்வினா. இந்தப் பார்வையில் நியாயம் உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. அதிமுக வைப் பின்னிருந்து இயக்கும் பாஜக வையே அழைத்த பிறகு, அவர்களின் கைப்பாவையாக உள்ள அதிமுக வையும் அழைத்திருக்கலாம்தான்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு நண்பர், தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசும்போது, காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டு சேராது, திமுக, அதிமுகவுடன் கூட்டு சேராது என்பதைத் தவிர, மற்ற அனைவரும் யாரும் யாருடனும் கூட்டு சேர்வார்கள் என்கிறார். அதாவது காங்கிரசுக்கு பாஜக மட்டுமே எதிரி, திமுகவுக்கு அதிமுக மட்டுமே எதிரி என்பதாக இதன் பொருள் அமைகிறது. பலரும் அவ்வாறே எண்ணிக் கொண்டுள்ளனர்.

கொள்கைகளின் அடிப்படையில் நுணுகிப் பார்த்தால் இரண்டுமே முழு உண்மையில்லை என்பது புரியும். காங்கிரசும், , பாஜகவும் மதவாதம், மதச் சார்பின்மை என்னும் அடிப்படையில் வேறுபட்டு நிற்கும் கட்சிகளே என்றாலும், அனைத்துச் சித்தாந்தங்களிலும் முரண்பட்டவை அல்ல. ஈழச் சிக்கல், ஆட்சிமொழிச் சிக்கல், உலகமயமாதல் போன்ற பலவற்றில் ஒத்த கருத்துடையவைகளே! அதே போல, திமுக, அதிமுக இரண்டும் நேர் எதிரான சித்தாந்தம் உடையவை என்று கூற முடியாது. அதிமுக எந்த சித்தாந்தத்தையும் முன்வைக்காத கட்சி என்பதால், அங்கே சித்தாந்த மோதலுக்கே இடமில்லை.

தமிழக அரசியலைப் பொறுத்தவரையில், திமுக, காங்கிரஸ் ஆகியனவே 1971 வரையில் எதிரெதிர்க் கட்சிகளாகத் தேர்தல் களத்தில் நின்றன. 1972இல் அதிமுக என்று ஒரு கட்சி தோன்றிய பின்னரே, களநிலவரம் மாறியது. அது இன்றுவரை தொடர்கிறது. எனினும், ஜெயலலிதா இறப்புக்குப் பின், அக்கட்சி தன் நடைமுறை வீரியத்தையும் இழந்துவிட்டது.

இப்போது சாரமற்றுப் போன அதிமுகவைப் பின்னணியிலிருந்து பாஜகவே இயக்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. பா.ஜ.க. தன் மனுநீதிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நிலைநாட்ட விரும்புகிறது.

திராவிட இயக்கம் சமூக நீதிக்காகவே பிறந்த இயக்கம். திராவிட இயக்கத்தின் அரசியல் நீட்சியாக இன்று தமிழகத்தில் வலிமையுடன் இருக்கும் கட்சி திமுகவே. ஆதலால், அதிமுக என்னும் போலியான, உள்ளீடற்ற ஒரு கட்சி இனி திமுகவிற்கு எதிரியாக இருக்க முடியாது.

கொள்கை அடிப்படையில் சமூக நீதிக்கும், மனு நீதிக்கும் இடையில்தான் முரண்பாடும் மோதலும் உள்ளன. ஆதலால், திமுகவின் எதிர்கால அரசியல் எதிரி, அதிமுக இல்லை, பாஜகதான் என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response