விடிய விடிய பதட்டம் – காவேரி மருத்துவமனை முன் கலங்கி நின்ற தொண்டர்கள்

காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்த பதட்டம், ஜூலை 28 ஞாயிறு இரவு எட்டுமணியிலிருந்து திடீரென அதிகரித்தது.

வழக்கமாக இரவு 8 மணி அளவில் கருணாநிதியின் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகும். ஆனால் அந்த நேரத்தில் நேற்று அறிக்கை வெளியாகாததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதே நேரம் மருத்துவமனை முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சென்னை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இரவு 9.50 மணிக்கு காவேரி ஆஸ்பத்திரியின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவருடைய உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மருத்துவ அறிக்கை வெளியான பிறகு இரவு 10.15 மணி அளவில் ஆ.ராசா, வெளியே கூடி இருந்த நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது நேரம் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டது. தற்போது டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக அந்த பின்னடைவு சீர்செய்யப்பட்டு கருணாநிதி நல்ல நிலையில் இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே வதந்திகளை நம்பவேண்டாம். பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். டாக்டர்களின் தீவிர முயற்சியால் அது சீர்செய்யப்பட்டுவிட்டது” என்றார்.

ஆனாலும் மருத்துவமனை முன்பு தொணடர்கள் கூட்டம் அதிகமானது. இதனால் காவல்துறைக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. லேசான தடியடி நடத்தி தொண்டர்கள் கலைக்கப்பட்டனர். என்றாலும் தொண்டர்கள் மறுபடியும் அங்கு வந்து கூடினார்கள்.

அதன்பின் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

நம் அனைவரின் அன்புக்குரிய கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நிலை சீராகி வருகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

ஆகவே, கழகத் தோழர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுத்து விடாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

என்று கூறியிருந்தார்.

ஆனாலும் திமுக தொண்டர்கள் சமாதானமடையவில்லை. மருத்துவமனைக்கு பேராசிரியர் க.அன்பழகன் வருகையும், காவல்துறை ஆணையர் வருகையும் பதட்டத்தை அதிகப்படுத்தியது.

சென்னைக்காரர்க்ள் காவேரி மருத்துவமனை முன்பும், மற்ற ஊர்க்காரர்கள் தொலைக்காட்சி முன்பும் விடிய விடியக் காத்துக் கிடந்தனர்.

விடிய விடியப் பதட்டமாக இருந்தாலும் கலைஞர் நலம் என்று திங்கள் பொழுது விடிந்தது. மருத்துவமனை வாயிலில் காத்திருக்கும் திமுக தொண்டர்கள் அமைதியாக அன்புத்தலைவர் முகம் காணக் காத்திருக்கின்றனர்.

Leave a Response