பகத்சிங்கை தூக்குமேடையிலே ஊஞ்சலாட்டி உவகை கொண்ட ஏகாதிபத்தியம், திருப்பூர் குமரனை தடி கொண்டு தாக்கி தெருவெல்லாம் குருதியோடச் செய்து, அதை நக்கிக் குடித்து எக்காளமிட்ட ஏகாதிபத்தியம் – இதோ, இன்றும் அதே ஏகாதிபத்திய குரலெடுத்து தன் சொர சொரப்பான ரத்த நாக்குகளால் கணபதியையும் ருசித்துப் பார்த்து விட்டது.
“கணபதி தூக்கிலிடப்படுவார்” – இச்செய்தி திராவிடத்தை – ஏன் உலகத்தையே எட்டிய நேரத்தில் திராவிடம் சோர்ந்து வீழ்ந்தது.
அதே வேளையில் ஆறுதல் சிறிது தலை நீட்டியது, “சுதந்திர பூமியில் – சுதந்திர வீரர்களாய் – சுதந்திரத் தலைவர்களைப் பெற்றிருக்கிற நமக்கு ஏன் அச்சம்? நமக்கு ஏன் வீண் சஞ்சலம்? நமது சர்க்கார், நமது நாட்டு கணபதியை அநாதையாக மலேயாவில் மாள விடாது என மனத்தைத் திடப்படுத்திக் கொண்டோம். அதுமட்டுமல்ல; `காமன் வெல்த்’தோடு ஏற்படும் உறவு, கணபதியைக் காப்பாற்றும் என நம்பி கண்ணீரைத் துடைத்துக்கொண்டோம். துடைத்த கையை எடுக்கவில்லை. தூக்குமேடை கணபதியைத் தின்று ஏப்பமிட்ட சப்தம் நமக்கு கேட்டு விட்டது.
தம்பிக் கோட்டையிலே பிறந்த கணபதி, ஒரு சாண் வயிற்றுக்காக இளமையிலே மலேயாவுக்கு ஓடினார். ஒரு கணபதியா? எத்தனை கணபதிகளை….ஏ! தாழ்ந்த தமிழகமே!….நீ…மலேயாவுக்கும் இலங்கைக்கும் அனுப்பியிருக்கிறாய். செப்புச் சிலைகளுக்குத் தேருந் திருவிழாவும்!….செல்வச் சீமான்களுக்கு சீரும் சிறப்பும்! கணபதிகள் காலந்தள்ள, “இலங்கையும் மலேயாவும்!
-தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.ஏ.கணபதி மலேயாவில் அகில மலேயா தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தவர். தொழிலாளர்களின் உரிமைகள்-10 பைசா கூலி உயர்வு ஆகியவற்றுக்காகத் தீவிரமாக செயல்பட்டவர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். இந்திய பிரதமர் நேருவுக்கு அறிமுகமானவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்று, மலேயாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடியவர். அரசாங்கத்தின் நெருக்கடியால் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியும் 6 ரவுண்டு தோட்டாக்களும் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கணபதியைக் காப்பாற்ற பல தரப்பிலிருந்தும் குரல்கள் ஒலித்தன. இந்திய அரசும் முயற்சித்தது. பலனில்லை. மலேசியா கோலாலம்பூர் புடு சிறைச்சாலையில் 1949 மே 4ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார். மலேயா மண்ணில் ஒரு தமிழர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டதன் தாக்கத்தால் கலைஞர் எழுதிய வரிகள்தான் மேலே இருப்பவை.
‘கயிற்றில் தொங்கிய கணபதி’ என்ற தலைப்பில் கலைஞர் தனது 25வது வயதில் எழுதிய சிறு வெளியீடு, மரண தண்டனைக்கு எதிரான அவரது முதல் குரலாக அமைந்தது.
“ஆங்கிலேயராட்சியிலே மலேயா சென்ற கணபதி, அதே ஆங்கிலேய சர்க்காரால் சவமாகச் சாய்க்கப்பட்டார். கணபதி எந்த வெள்ளை முதலாளியையும் சுட்டுக் கொன்றதாக வழக்கு கிடையாது. கையிலே துப்பாக்கி வைத்திருந்த ஒரே குற்றத்திற்காக இந்தக் கோர மரண தண்டனை! தீர்ப்பு கேட்டு திராவிடம் திகைத்தது. நமது தமிழர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், கணபதியின் கழுத்தை இறுக்கிய கயிறு, அடுத்து சாம்பசிவத்தின் முன்னே தொங்கிக் கொண்டிருக்குமா? அவர்கள் கண்களிலே நெருப்புக் கிளம்பியிருந்தால் வீர சேனனை நோக்கி குண்டுகள் கிளம்பியிருக்குமா?” என அனல் கக்கியது கலைஞரின் பேனா.
25 வயதில் மரண தண்டனைக்கு எதிராகவும் மலேயா கணபதியின் தியாகத்தைப் போற்றியும் வெளிநாடுகளில் துயரப்படும் தமிழர்களின் நிலைமையை உணர்த்தியும் எழுதிய கலைஞர், 45 வயதில் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அடித்தட்டு மக்களின் உரிமைக்கான போராட்டக் களத்தில் இடதுசாரிப் பார்வையுடன் தீவிரப் பாதையைத் தேர்வு செய்து செயலாற்றிய புலவர் கலியபெருமாள், தோழர் தியாகு உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வலியுறுத்தி கோரிக்கைகள் எழுந்தன. கேரளாவில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த (நீதிபதி) கிருஷ்ணய்யர், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தோழர் சி.ஏ.பாலன் அவர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையிலும், மாநில அரசுக்குள்ள உரிமைப்படி தண்டனைக் குறைப்பு செய்தார். அவை போன்ற முன்னுதாரணங்களைக் கருத்திற் கொண்டு, சட்ட ஆலோசனைகளை நடத்திய கலைஞர், அரசியல் சட்டப் பிரிவின் 161வது பிரிவின் கீழ் முதல்வருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களின் மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் சிறைவாசிகளாக்கியது கலைஞரின் பேனா.
இது குறித்து தோழர் தியாகு, “கட்சி எடுத்த முடிவின்படி ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த முத்து தங்கப்பா என்பவர் 1970இல் படுகொலை செய்யப்படுகிறார். இதில் நான் உட்பட தோழர்கள் ரெங்கசாமி லெனின், குருமூர்த்தி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுகிறோம். எங்கள் மீதான வழக்கு செசன்ஸ் கோர்ட்டில் நடந்து 1972இல் எங்கள் மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப் படுகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறோம். ஆனால் உயர் நீதிமன்றமும் எங்களின் தூக்குத் தண்டனையை உறுதி செய்கிறது. அப்போது தமிழக முதல்வராக கலைஞர் இருந்தார். உயர் நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு ஆளுநரிடம் நாங்கள் விண்ணப்பித்தோம். ஆளுநரும் தமிழக அரசிடம் இது குறித்து கருத்துரு கேட்டார். அப்போது கலைஞர் தனது அமைச்சரவையைக் கூட்டி எனது கருணை மனு மீது விவாதித்து ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று முடிவு செய்து அதை ஆளுநருக்குப் பரிந்துரைத்தார். அதன்படி ஆளுநர் எங்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். இதன் மூலம் தூக்குக்கயிற்றை முத்தமிட இருந்த நாங்கள் காப்பாற்றப்பட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புலவர் கலியபெருமாள் தற்போது இல்லை. அவரது இளையமகன் சோழநம்பியார் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில், ”போலீஸ் இன்ஃபார்மர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 1971இல் அப்பா கலியபெருமாளுக்கும் அண்ணன் வள்ளுவனுக்கும் நீதிபதி சிங்காரவேலு தூக்குத் தண்டனை விதித்தார். உயர்நீதிமன்றத்தில் அண்ணனுடைய தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவரும் எம்.பி.யுமான தோழர் கல்யாணசுந்தரம், குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியை சந்தித்து ஆலோசனைப் பெற்று, 1974ஆம் ஆண்டு 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி ஆளுநருக்கு அனுப்பினார். அவர் அதனை அப்போது முதல்வராக இருந்த கலைஞருக்கு அனுப்பினார். கலைஞர் தனது அமைச்சரவையில் இதனை விவாதித்து, மாநில அரசுக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி புலவர் கலியபெருமாளின் தண்டனையைக் குறைக்கலாம் என்று சொல்லி அதன்படி முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரைத்தார் கலைஞர். மாநில அரசின் பரிந்துரையை ஏற்று எனது அப்பாவின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தார் ஆளுநர்.
எனவே மாநில முதல்வர் மனது வைத்தால் தூக்குத் தண்டனையிலிருந்து யாரையும் காப்பாற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார். கலைஞருக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு முதல்வராக வந்தவர்கள் இந்த 161வது பிரிவு தரும் அதிகாரத்தைப் பயன்படுத்திட ஆர்வம் காட்டவில்லை.
உயிரோவியமான படைப்புகளைத் தந்த கலைஞரின் பேனாவுக்கு, மதிப்புமிக்க மனித உயிர்களைத் தூக்கு கயிற்றிலிருந்து மீட்டெடுத்த வலிமையும் வரலாறும் உண்டு.
– கோவி.லெனின்