ஈரோடு பள்ளிச் சிறுவனின் நேர்மை – மக்கள் பாராட்டு

ஈரோடு அருகே உள்ள கனிராவுத்தர்குளம் நந்தவனத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா. ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி அப்ருத் பேகம். இவர்களுக்கு முகமது முஜமில் (வயது 13), முகமது யாசின் (7). ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதில் முகமது முஜமில் 8-ம் வகுப்பும், முகமது யாசின் 2-ம் வகுப்பும் சின்னசேமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் 2 பேரும் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர்.

பகல் 11 மணிக்கு பள்ளிக்கூடத்தில் இடைவெளி நேரம் விடப்பட்டது. இதனால் முகமது யாசின் சிறுநீர் கழிப்பதற்காகப் பள்ளிக்கூடத்திற்கு அருகில் சென்றுள்ளார். அப்போது ரோட்டில் ஒரு பணக்கட்டு கிடந்துள்ளது. இதைப்பார்த்த முகமது யாசின் அதை எடுத்துக்கொண்டு நேராக தனது வகுப்பறைக்கு சென்று, ஆசிரியை ஜெயந்தி பாயிடம் கொடுத்தார்.

உடனே அவர் அந்த மாணவனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூட தலைமை ஆசிரியையான யாஸ்மினிடம் சென்று அந்தப் பணத்தை கொடுத்துள்ளார். அவர் எண்ணி பார்த்ததில் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த கட்டில் மொத்தம் ரூ.50 ஆயிரம் இருந்துள்ளது.

அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை யாஸ்மின், மாணவன் முகமது யாசினை ஈரோடு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார். பின்னர் அவர், அந்த மானவனுடன் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சக்தி கணேசனை சந்தித்து பணத்தை ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து சக்தி கணேசன், மாணவரின் நேர்மையைப் பாராட்டி அவனுக்கும், அவனது அண்ணனுக்கும் சீருடை, பேக், ஷூ போன்றவற்றை வழங்கினார். மேலும் வருகிற 19-ந் தேதி மாணவனுக்கு பாராட்டு விழா நடத்தி அவனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழக்கப்பட உள்ளதாகவும் சக்தி கணேசன் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, அந்த பணத்தில் ஐ.டி.பி.ஐ. வங்கி கவர் இருந்தது, அதை தொலைத்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

10 ரூபாய் கீழே கிடந்தாலே எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு போகும் இந்த காலத்தில் ரூ.50 ஆயிரத்தை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைந்த அந்த மாணவனை காவல்துறையினரும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

Leave a Response