திரும்பிப்போ அமித்ஷா – தமிழகத்தில் எதிர்ப்பு

2019 மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் அதன் தலைவர் அமித்ஷா ஈடுபட்டுள்ளார். இதற்காக இந்தியா முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் 5 வாக்குச் சாவடிகளை ஒரு சக்தி கேந்திரமாகவும் 6 சக்தி கேந்திரங்கள் மகா சக்தி கேந்திரமாகவும் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.

சக்தி கேந்திர பொறுப்பாளர்களாக 13,056 பேரும் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களாக 2,750 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வருகிறார். காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், பின்னர்விஜிபி தங்க கடற்கரை வளாகத்துக்கு 12 மணிக்கு செல்கிறார். அங்கு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவோடு மதியம் 2 மணி வரை ஆலோசனை நடத்துகிறார்.

அதைத் தொடர்ந்து, தமிழகம், அந்தமான், புதுச்சேரியைச் சேர்ந்த பொறுப்பாளர்களை பிற்பகலில் சந்திக்கிறார். மாலை 4.30 முதல் 5.30 வரை ஆர்எஸ்எஸ், விஎச்பி, இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் மாநில நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை சக்தி கேந்திரம், மகாசக்தி கேந்திர பொறுப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது. இன்றிரவு சென்னையில் தங்கும் அவர், நாளை காலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

மோடி தமிழகம் வந்தபோது, திரும்பிப்போ மோடி #GoBackModi என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேபோல இப்போது அமித்ஷாவுக்கும் திரும்பிப் போ அமித்ஷா #GobackAmitsha என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஏராளமானோர் அதற்கு ஆதரவு தெரிவிப்பதால், அது டிரெண்டாகிவருகிறது.

Leave a Response